×

ராகுல்காந்திக்கு எதிராக பேச்சு மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: அதானி கிரீன் நிறுவனம் மின்சார விநியோகத்துக்கான ஆர்டரை பெறுவதற்காக இந்தியாவில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரின் 9ம் நாளான நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் இந்த விவகாரத்தை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் “மோடியும் அதானியும் ஒன்று, அதனால் அதானி பாதுகாப்பாக இருக்கிறார்” என பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, “அதானி மீது விசாரணை நடத்த பிரதமர் மோடி அனுமதிக்க மாட்டார். ஏனெனில், அதானி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் பிறகு தானும் விசாரணைக்கு உட்பட வேண்டியது இருக்கும் என்பது அவருக்குத் தெரியும்.” என விமர்சித்தார்.
தொடர்ந்து அதே ஆடையுடன் மக்களவைக்குள்ளும் எதிர்க்கட்சி எம்பிக்கள் சென்றனர். அப்போது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,’ எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கை ஏற்கத்தக்கது அல்ல. எதிர்க்கட்சியினர் வண்ணமயமான ஆடைகளை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளனர். நாடாளுமன்றத்திற்கு வெளியே அந்த வண்ணமயமான ஆடைகளை அணிந்துகொண்டு பேஷன் ஷோவை ஆரம்பித்துள்ளனர். இது நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை குறைக்கிறது, நான் கண்டிக்கிறேன்’ என்றார். இதனால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, சம்பலுக்குச் செல்ல முயன்ற ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தியது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. கேள்வி நேரம் முக்கியம் என்றும் திட்டமிட்ட ரீதியில் அவை நடைபெறும் என்றும் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து, கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்றது. நண்பகல் பூஜ்ஜிய நேரத்தின் போது பேசிய பா.ஜ எம்பி நிஷிகாந்த் துபே, ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டத்தின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் அடிப்படையில் நமது நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்க அமெரிக்க தொழில் அதிபர் ஜார்ஜ் சோரசுடன் இணைந்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.

மேலும் பிரதமர் மோடியின் நன்மதிப்பை கெடுக்க அவர்கள் இணைந்து செயல்படுகிறார்கள்’ என்று குற்றம் சாட்டினார். மேலும் ராகுல்காந்தி, பிரியங்காவை தொடர்புபடுத்தி பேசினார். நிஷிகாந்த் துபே கருத்துக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் அமளி ஏற்பட்டது. இதனால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார். அதன்பிறகும் அவை தொடங்கிய போது நிஷிகாந்த் துபே மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை 3 மணிக்கும், அதை தொடர்ந்து நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் பாஜ எம்.பி சுதான்ஷு திரிவேதி இதே பிரச்னை எழுப்பி பேசினார். அவர் பேசுகையில்,’ஹிண்டன்பர்க் அறிக்கை, கோவிட் தடுப்பூசி அறிக்கை, இந்திய விவசாயிகள் பற்றிய அறிக்கை, பிபிசி ஆவணப்படம், பெகாசஸ் பிரச்னை, மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த வீடியோ உள்ளிட்டவை அடுத்தடுத்து வெளிநாட்டு சக்திகள் மூலம் வெளியிடப்படுகின்றன. இந்தியத் தேர்தலில் வெளிநாட்டுத் தலையீடு இருப்பதாக ரஷ்யாவும் கூறியது. நமது ஜனநாயகத்தை சிதைக்க இங்குள்ள சிலர் முயற்சி செய்கிறார்கள்’ என்றார். அவரது பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் குறுக்கிட்டு,’ நமது நாட்டின் மிகப்பெரிய ஜனநாயகத்தை செயலிழக்கச் செய்வதை அனுமதிக்க முடியாது ’ என்றார். ஆனால் அமளி நீடித்ததால் பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

* எல்லா மசோதா பெயரும் இந்தியில் இருப்பது ஏன்?
ஒன்றிய அரசு தாக்கல் செய்யும் அத்தனை மசோதாக்களும் இந்தியில் இருப்பதாக மாநிலங்களவையில் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சி எம்பிக்கள், இந்தி மொழியில் தலைப்புகள் கொண்ட புதிய மசோதாக்களை கொண்டு வருவதன் மூலம் இந்தி மொழியை திணிப்பதாக குற்றம் சாட்டினர். 90 ஆண்டுகள் பழமையான விமானச் சட்டத்தை மாற்ற முயலும் ‘பாரதிய வாயுயான் விதேயக், 2024’ குறித்த விவாதத்தில் பங்கேற்று பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சகரிகா கோஷ், திமுக எம்பி கனிமொழி என்.வி.என்.சோமு,ஒய்ஆர் காங்கிரஸ் கட்சியின் எஸ் நிரஞ்சன் ரெட்டி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக எம்பி கனிமொழி என்விஎன் சோமு பேசுகையில், ‘மசோதாவின் தலைப்பை ஒன்றிய அரசு விமான மசோதா 2024 என மாற்ற விரும்புகிறேன். இந்தி பேசாதவர்கள் மீது இந்தியைத் திணிக்க முயற்சிக்காதீர்கள் என்று ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறேன். இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் மசோதாக்களுக்கு பெயர் வைப்பதை அரசு தவிர்க்க வேண்டும்’ என்றார்.

* சபாநாயகர் எச்சரிக்கை
மக்களவையில் தேசிய மூவர்ணக் கொடியைத் தவிர மற்ற பேட்ஜ்களை அணிய வேண்டாம் என்று எம்பிக்களிடம் சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார். “மோடியும் அதானியும் ஒன்று, அதனால் அதானி பாதுகாப்பாக இருக்கிறார்” என்ற வாசகம் பதித்த டிசர்ட் அணிந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அவை நடவடிக்கையில் பங்கேற்றதால், நடத்தை விதிகளின் விதி எண் 349 அடிப்படையில் அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

The post ராகுல்காந்திக்கு எதிராக பேச்சு மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Lok Sabha ,New Delhi ,Adani Green ,US ,India ,Congress ,
× RELATED தனியார்மயத்தால் தரமான கல்வியை தர...