பெரம்பலூர், டிச.5: மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, பெரம்பலூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி 2024- 2025-ம் ஆண்டுக்கான பள்ளி மாணவ மாணவியருக்கான பேச்சுப்போட்டி பெரம்பலூர் -துறையூர் சாலையில் உள்ள மாவட்ட பாரத சாரண- சாரணியர் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சிலம்பரசன், குரும்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை பூஞ்சோலை, அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் மோகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறந்த மாணவ மாணவிகளைத் தேர்வு செய்தனர். போட்டிகளை பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சித்ரா தொடங்கிவைத்தார்.
இதன்படி, அனுக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி 8ஆம் வகுப்பு அ- பிரிவு மாணவி ரிசிகாம்பாள் முதல் இடத்தையும், பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி 8ஆம் வகுப்பு அ- பிரிவு மாணவி கௌசல்யா 2ஆம் இடத்தையும், வாலிகண்ட புரம் அரசு மேல் நிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு ஆ- பிரிவு மாணவி ஜெயப்பிரதா 3ஆம் இடத்தையும் பெற்றனர். செட்டிக்குளம் அரசு மேல் நிலைப்பள்ளி 11 ஆம் வகுப்பு ஆ- பிரிவு மாணவி காயத்ரி, பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு ஊ- பிரிவு மாணவி கீர்த்தனா ஆகிய இருவரும் சிறப்பு பரிசுகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் முதல் பரிசாக ரூ5- ஆயிரமும், 2ஆம் பரிசாக ரூ3- ஆயிரமும், 3ஆம் பரிசாக ரூ2-ஆயிரமும், சிறப்புப் பரிசுகளாக ரூ2 ஆயிரமும், போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக வழங்கப்பட்டது.
The post மகாத்மா காந்தி பிறந்தநாள் பேச்சு போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கல் appeared first on Dinakaran.