×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கோலாகலம் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: 40 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடுகள் நடந்தன. பின்னர், பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் அலங்கார ரூபத்தில் கொடிமரத்தின் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அதைத்தொடர்ந்து, காலை 6.27 மணியளவில் அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா என விண்ணதிர முழக்கமிட்டனர். விழாவையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 3ம் பிரகாரம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிறைந்திருந்தது. துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பாஸ்கரபாண்டியன், எஸ்பி சுதாகர், டிஆர்ஓ ராமபிரதீபன், கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பின்னர், காலை 11.15 மணியளவில் வெள்ளி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் ராஜகோபும் எதிரில் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து, மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு 9 மணியளவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தில் இருந்து வாணவேடிக்கையுடன் இரவு உற்சவ புறப்பாடு நடந்தது. அப்போது, அலங்கார ரூபத்தில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளை பக்தர்கள் தரிசித்தனர். இரவு உற்சவத்தில், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணியரும், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும், ஹம்ச வாகனத்தில் பராசக்தி அம்மனும், சிம்ம வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் பவனி வந்தனர். கடும் குளிரையும், விட்டு விட்டு பெய்த மழையையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு வரை திரண்டிருந்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து 10 நாட்கள் உற்சவம் நடக்கிறது. இன்று காலை உற்சவத்தில் தங்க சூரிய பிரபை வாகனங்களில் விநாயகர், சந்திரசேகரர் பவனி.

இரவு உற்சவம்: வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகள் பவனி நடக்கிறது. முக்கிய நிகழ்வுகளான வெள்ளித் தேரோட்டம் வரும் 9ம் தேதியும், மகா தேரோட்டம் வரும் 10ம் தேதியும் நடைபெறும். நிறைவாக, வரும் 13ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் ஏகன் அநேகன் எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் பரணி தீபம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து, அன்று மாலை 6 மணிக்கு 2,688 அடி உயர அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக, 4,500 கிலோ நெய், செப்பு கொப்பரை, 1,500 மீட்டர் திரி ஆகியவை பயன்படுத்தப்படும். தீபத்திருவிழாவில், இந்த ஆண்டு சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கோலாகலம் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: 40 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kolagalam Karthikai Deepa festival ,Tiruvannamalai Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Karthikai Deepatri Festival ,Annamalaiyar Temple ,Thiruvannamalai ,Swami ,Amman ,Panchamurthys Vinayagar ,Subramaniyar ,Ninnamulaiyamman ,
× RELATED திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பரணி தீபம் ஏற்றம்.