சென்னை: உடல் நலக்குறைவால் காலமான கலைஞரின் செயலாளர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏ.எம்.ராமன் இல்லத்திற்கு நேற்று நேரில் சென்று அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: கலைஞரின் செயலாளராகப் பணிபுரிந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏ.எம்.ராமன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர், உயர்கல்வித்துறைச் செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர் எனப் பல்வேறு பொறுப்புகளிலும் திறம்படப் பணியாற்றிய ராமன் கலைஞர் முதல்வராக இருந்தபோது, அவரது செயலாளராக 1996-1999 வரை பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவருடன் பணிபுரிந்த அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post கலைஞரின் செயலாளர் ஏ.எம்.ராமன் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.