- இந்தியா
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மு.கே ஸ்டாலின்
- மூன்றாம் தேசிய இணைய மாநாடு
- அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு
- தில்லி
- ராஜ்ய சபா
- சமூக நீதி மாநாடு
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பின் மூன்றாவது தேசிய இணைய மாநாட்டில் பேசியதாவது: சமூகநீதி மாநாட்டைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான வில்சனுக்கு பாராட்டுக்கள். மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அகில இந்திய தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி. தமிழ்நாட்டு மக்களுக்கு சமூகநீதி வழங்கியதோடு, இந்தியாவின் மற்ற மாநில ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், அத்தகைய உரிமை கிடைக்க வழிகாட்டியதும் திராவிட இயக்கம் தான். கடந்த 10ஆண்டு காலத்தில் ஒன்றிய அரசின் துறைகளில், பிற்படுத்தப் பட்டோருக்கான 27 விழுக்காடு ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை. பாஜ பெண்களுக்கும் விரோதமான கட்சிதான்.
அதனால்தான், பெண்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்கள். 1929ம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில்தான், பெண்களுக்குச் சொத்துரிமை, பணியுரிமை, மறுமணம் செய்துகொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு புரட்சிகரமான பெண்ணுரிமைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாகத்தான், தி.மு.க. அரசில் பெண்களின் நலன் சார்ந்த பல்வேறு அடுக்கடுக்கான திட்டங்கள் தீட்டப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம். 2021ம் ஆண்டே எடுக்கப்பட்டிருக்க வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒன்றிய பா.ஜ அரசு உடனே தொடங்கவேண்டும். அதோடு இணைத்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தவேண்டும்.
சமூக நீதி, மதசார்பற்ற அரசியல், சமதர்மம், சமத்துவம், மாநில சுயாட்சி, கூட்டாட்சிக் கருத்தியல் இவை உயிர்வாழும் இந்தியாவே, இணையற்ற இந்தியா எனவே, இத்தகைய கருத்தியல்களை நாம் ஒன்று சேர்ந்து முன்னெடுக்க வேண்டும். சமூகநீதி இந்தியாவை உருவாக்க சமதர்ம இந்தியாவை உருவாக்க சகோதரத்துவ இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து போராட வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதில், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஈஸ்வரய்யா, அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.வில்சன் எம்பி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி. ராஜா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்திர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பரூக் அப்துல்லா, திக தலைவர் கி. வீரமணி, எம்பிக்கள் கனிமொழி, ஆ. ராசா, திருச்சி சிவா, வைகோ, திருமாவளவன், எம்எல்ஏக்கள் ஜவஹிருல்லா, ஈஸ்வரன், பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
The post சமூகநீதி, சமதர்ம, சகோதரத்துவ இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து போராட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.