×

மாநில கல்லூரி மாணவன் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்; பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன்: மருத்துவமனை அவசர சிகிச்சைப்பிரிவில் பணியாற்ற நிபந்தனை


சென்னை: மாநிலக் கல்லூரி மாணவன் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த திருத்தணியை சேர்ந்த மாணவன் சுந்தர், கடந்த அக்டோபர் 4ம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். அவரை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு கடந்த அக்டோபர் 9ம் தேதி மாணவன் சுந்தர் மரணம் அடைந்தார். இதையடுத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் சந்துரு, ஈஸ்வர், ஈஸ்வரன் மற்றும் யுவராஜ் ஆகிய நான்கு பேர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, 4 மாணவர்களுக்கும் ஜாமீன் வழங்கிய நீதிபதி, ராஜிவ் காந்தி மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் மாணவர்கள் பணியாற்ற வேண்டுமென்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பணிபுரிய உத்தரவிட்ட நீதிபதி, இதுதொடர்பாக அறிக்கை அளிக்குமாறு மருத்துவ அலுவலருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் பச்சையப்பன் மற்றும் மாநிலக் கல்லூரி முதல்வர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post மாநில கல்லூரி மாணவன் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்; பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன்: மருத்துவமனை அவசர சிகிச்சைப்பிரிவில் பணியாற்ற நிபந்தனை appeared first on Dinakaran.

Tags : High Court ,Pachaiyappan College ,Chennai ,Chennai High Court ,Sundar ,Tiruthani ,Chennai State College ,State College ,
× RELATED மாநில கல்லூரி மாணவரை அடித்துக் கொன்ற...