திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே மேய்ச்சலுக்கு சென்றபோது, அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த 10 மாடுகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 30ம்தேதி இரவு வீசிய பெஞ்சல் புயல் காரணமாக, திருப்போரூர், கேளம்பாக்கம், மாம்பாக்கம், செம்பாக்கம், தண்டலம் ஆகிய இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், சுமார் 200க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன.
பெரும்பாலான இடங்களில் மின்கம்பங்கள் புதியதாக அமைக்கப்பட்டு, மின்வயர்கள் இணைத்து மின்சாரம் வழங்கப்பட்டது. அப்போது, கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமம், சிவன் கோயில் தெருவை சேர்ந்த கிருஷ்ணவேணி. இவருக்கு, சொந்தமான மாடுகள், மேய்சலுக்கு சென்ற நிலையில், இரவு வீடு திரும்பவில்லை. இதனால், அவர் நேற்று முன்தினம் காலை மாடுகளை தேடி வயல்வெளி பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது, ஏரி எதிர்வாயில் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து, கிருஷ்ணவேணிக்கு சொந்தமான 9 மாடுகள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான 1 மாடு என மொத்தம் 10 மாடுகளும் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்து கிடந்தன.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கேளம்பாக்கம் போலீசாரும், தையூர் கிராம அலுவலரும் உயிரிழந்த மாடுகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post கேளம்பாக்கம் அருகே மின்சாரம் பாய்ந்து 10 மாடுகள் பலி appeared first on Dinakaran.