ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் மறைந்த வக்கீல் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் சேம நல நிதியை நீதிபதி வழங்கினார். ஊத்துக்கோட்டை நீதிமன்ற வழக்கறிஞர் தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த குமார் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். அவரது குடும்பத்திற்கு ஊத்துக்கோட்டை வக்கீல் சங்க தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜிடம் கோரிக்கை வைத்ததன் பேரில் வழக்கறிஞர்கள் சேம நலநிதி வழங்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி மறைந்த வழங்கறிஞர் குமார் குடும்பத்திற்கு சேம நல நிதி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் சங்க தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் கவிபாரதி, பொருளாளர் நரசிம்மன், துணைத்தலைவர் சாந்தகுமார், துணைச்செயலாளர் சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஊத்துக்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செந்தமிழ்ச்செல்வன் மறைந்த வக்கீல் குமாரின் மனைவி அம்பிகாவிடம் சேம நல நிதியான ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்வில் மூத்த வக்கீல்கள் பார்த்திபன், ராஜசேகர், வெற்றி தமிழன், சீனிவாசன், ஜான் பொன்னுசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post ஊத்துக்கோட்டையில் மறைந்த வக்கீல் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி: நீதிபதி வழங்கினார் appeared first on Dinakaran.