சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளுக்காக அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களின் ஒரு மாத ஊதியமான 1 கோடியே 30 இலட்சத்து 19 ஆயிரத்து 750 ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இன்று தலைமைச் செயலகத்தில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா, திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரது ஒரு மாத ஊதியமான 1 கோடியே 30 இலட்சத்து 19 ஆயிரத்து 750 ரூபாய்க்கான வங்கி வரைவோலைகள்/காசோலைகளை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம். கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி, தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் அவர்கள், தங்களது சட்டமன்ற உறுப்பினருக்கான ஒரு மாத ஊதியத்தை ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 5.12.2024 அன்று தலைமைச் செயலகத்தில், அரசு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்.
மேலும், திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். அதன்படி, துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா, திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஒரு மாத ஊதியமான 1 கோடியே 30 இலட்சத்து 19 ஆயிரத்து 750 ரூபாய்க்கான வங்கி வரைவோலைகள்/காசோலைகளை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அவர்கள் இன்றையதினம் முதலமைச்சர் அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வின்போது, அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் உடனிருந்தார்.
The post ஃபெஞ்சல் புயல் பாதிப்பு.. அமைச்சர்களின் ஒரு மாத ஊதியம் ரூ.1.30 கோடிக்கான காசோலையை வழங்கினார் அமைச்சர் துரைமுருகன்!! appeared first on Dinakaran.