×

மயிலாடுதுறை, செங்கல்பட்டு உள்பட 10 மாவட்டங்களில் மொத்தம் 117 கால்நடைகள் உயிரிழப்பு: கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

சென்னை: மயிலாடுதுறை, செங்கல்பட்டு உள்பட 10 மாவட்டங்களில் மொத்தம் 117 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்புபடை தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, இலங்கை மற்றும் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை நோக்கி வரத் தொடங்கியது. அது தற்போது மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இது தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள கடிதம் வாயிலாக அறிவிக்கப்பட்டதோடு தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேட்டறிந்து தகுந்த அறிவுரைகளை வழங்கினர்.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, கன மற்றும் மிக கனமழை பெற வாய்ப்பு உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடி நிலைமையை கேட்டறிந்து, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

10 மாவட்டங்களில் 117 கால்நடைகள் உயிரிழப்பு

மயிலாடுதுறை, செங்கல்பட்டு உள்பட 10 மாவட்டங்களில் மொத்தம் 117 கால்நடைகள் உயிரிழப்பு.

2034 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைப்பு

50 நிவாரண முகாம்களில் 2034 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

11.75 லட்சம் பேருக்கு குறுஞ்செய்தி மூலம் வெள்ள எச்சரிக்கை

தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 11.75 லட்சம் பேருக்கு குறுஞ்செய்தி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

பலத்த மழையால் 438 வீடுகள் சேதம்

மழை காரணமாக அரியலூர், செங்கல்பட்டு உள்பட 20 மாவட்டங்களில் 438 வீடுகள் சேதமடைந்துள்ளன.

49 இடங்களில் நேற்று மிக மிக பலத்த மழை பதிவு

தமிழ்நாட்டில் நேற்று 49 இடங்களில் 21 செ.மீ.க்கு மேல் மழை கொட்டித் தீர்த்துள்ளது.

The post மயிலாடுதுறை, செங்கல்பட்டு உள்பட 10 மாவட்டங்களில் மொத்தம் 117 கால்நடைகள் உயிரிழப்பு: கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Chengalpattu ,K.K.S.S.R. Ramachandran ,Chennai ,National Disaster Response Force ,Bay of Bengal ,Sri Lanka ,Tamil Nadu… ,
× RELATED மயிலாடுதுறை நகர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்