×

பெஞ்சல் புயல் காரணமாக கன மழை கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 தரைப்பாலங்கள் பலத்த சேதம்: 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிப்பு

திருத்தணி: தொடர் கனமழையால் கண்டிகையிலிருந்து மடத்துக்கும்பம் செல்லும் சாலையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் உடைந்து சேதமாகியுள்ளது. மேலும் எல்.வி.புரம் பகுதியில் உள்ள தரைப்பாலமும் சேதமடைந்தது. இதனால் 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை மற்றும் மிதமான மழை பொழிந்தது. நேற்று முன்தினம் மாலை புயல் கரையை கடந்து வலுவிழுந்ததாக வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் அறிவித்திருந்தார். அதன்படி மாணவர்கள் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றனர். இருப்பினும் காலை முதல் சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்ததால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி மற்றும் குடை பிடித்துக்கொண்டு பள்ளிக்கு சென்றனர். தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல பெற்றோர் அவதிப்பட்டனர்.

மாணவர்களும் நனைந்தபடி பள்ளிக்குச் சென்றதால் பாதிப்பு அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பள்ளிப்பட்டில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு தொடங்கியுள்ளது. ஆந்திராவில் கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கம் வேகமாக நிரம்பி வருவதால் அணை முழு கொள்ளளவை எட்டியவுடன் உபரி நீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உள்ளது.

இந்த நிலையில் திருவாலங்காடு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இப்பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குப்பன் கண்டிகையிலிருந்து மடத்துக்கும்பம் செல்லும் சாலையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் சேதம் அடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக சென்று வர போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் தரைப் பாலத்திற்கு இருபுறமும் தடுப்பு வேலி அமைத்து திருவாலங்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் சேதம் அடைந்துள்ளதால் 5 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், குப்பன் கண்டிகை பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலம் உடைந்து சேதம் அடைந்த நிலையில் எல்.வி.புரம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் இடையில் தரைபாலத்தை மூழ்கடித்த வெள்ளத்தால், தரைப்பாலம் உடைந்து சேதம் அடைந்தது. பேரம்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதி மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் கொசஸ்தலை ஆற்றில் மழைநீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், அணையில் இருந்து நேற்று இரவு 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது.

இதனால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு, பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு வருவாய்த்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலங்கள் உள்ள பகுதிகளில் போலீசார் தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் ஆற்றை பொதுமக்கள் கடக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* கால்வாயில் மண் அகற்றம்
திருத்தணி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்னை பைபாஸ், மாவட்ட இதர சாலை, ரயில்வே சுரங்க சாலையில் அதிகளவில் வெள்ளம் ஏற்படுவதால், அங்குள்ள மழைநீர் வடிகால்வாயில் மண் குவியல் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் மழை வெள்ளம் சாலையில் தேங்கி நிற்பதை தடுக்கும் வகையில் உட்கோட்ட உதவி பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் ஞான அருள்ராஜ் ஆகியோரின் மேற்பார்வையில் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று மண் அகற்றப்பட்டது.

மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் மாநில நெடுஞ்சாலையோரங்களில் மழைநீர் வடிகால்வாய்களில் தேங்கியுள்ள மண் குவியலை அகற்றி மழை வெள்ளம் சாலையில் தேங்கி நிற்பதை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதேபோல் மழை பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளிலும் முழு வீச்சில் ஈடுபட்டு வருவதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

The post பெஞ்சல் புயல் காரணமாக கன மழை கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 தரைப்பாலங்கள் பலத்த சேதம்: 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Cyclone Benjal ,Kosasthalai River ,Tiruthani ,Kandigai ,Mathapam ,LVpuram ,Benjal storm ,Tiruvallur ,Dinakaran ,
× RELATED பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மணல் அகற்றம்