திருவண்ணாமலை, டிச.2: திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறியதால், கலெக்டரின் குடியிருப்பு பகுதி சுற்றுச்கவர் இடிந்து விழுந்து வெள்ளம் புகுந்தது.
திருவண்ணாமலை- வேலூர் சாலையில் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள வேங்கிக்கால் ஏரி கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையில் முழுமையாக நிரம்பியது. ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், காட்டாற்று வெள்ளம் போல உபரிநீர் வெளியேறியது. அதனால், வேலூர் சாலையில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதித்தது. எனவே, அந்த வழியாக வாகனங்கள் செல்லாமல், புறவழிச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.
இந்நிலையில், வேங்கிக்கால் ஏரியில் இருந்து வெளியேறி உபரிநீர் பெருக்கெடுத்து சென்றதால், ஏரிக்கு எதிரில் உள்ள கலெக்டர் குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அதனால், மழை வெள்ளம் கலெக்டரின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து குடியிருப்பு பகுதியை ஒட்டி உள்ள வரத்து கால்வாய்களை ஜேசிபி இயந்திரம் மூலம் சீர் செய்தனர்.
அதைத்தொடர்ந்து, மழைநீர் படிப்படியாக வடிந்தது. மேலும், கலெக்டர் குடியிருப்பு பகுதியை ஒட்டி அமைந்துள்ள குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததது. தொடர்ந்து, அந்தப் பகுதிகளிலும் தற்காலிகமாக வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
The post திருவண்ணாமலை கலெக்டர் குடியிருப்பு சுற்றுச்சுவர் இடிந்தது ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் appeared first on Dinakaran.