* 20 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின
திருவண்ணாமலை, டிச. 3: திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் 10 பேர் பலியாகினர். மேலும் 40 குடிசை வீடுகள் இடிந்து சேதமானது. 20 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கி உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதில் தீபமலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர் பலியாகினர். இதுதவிர பல இடங்களில் நடந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். அதன்படி மாவட்டத்தில் கடந்த 3 நாளில் மழையால் 10 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 40 குடிசை வீடுகள் இடிந்து சேதமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதவிர வயல்களில் தண்ணீர் தேங்கியதால் 20 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கி உள்ளது. இதில் செங்கம் தாலுகாவில் 14 மாட்டு கொட்டகை சேதமடைந்து, 3 மாடுகளும் ஒரு கன்றுக்குட்டியும் வெள்ளத்தில் அடித்துச்சென்று பலியானது. மேலும் செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா நெல் நடவு செய்யப்பட்டு இன்னும் 10 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் விளைச்சல் கனமழையால் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரம் ஹெக்டர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனை வேளாண்மை துறை வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பா தலைமையில் வேளாண்மை அலுவலர் முனியப்பன், துணை வேளாண்மை அலுவலர் ஏழுமலை மற்றும் கிராம உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் ஆய்வு செய்து, பயிர் சேதத்தை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆரணி பகுதியில் தொடர் கனமழையால் மலையம்பட்டு கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால், அதேபகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பயிரிட்டு இருந்த நெற்பயிரில் தண்ணீர் மூழ்கி சேதமடைந்த பயிர்களை ஆர்டிஓ பாலசுப்ரமணியம் நேற்று பார்வையிட்டார்.
கலசப்பாக்கம் வட்டத்தில் சுமார் 3,750 ஹெக்டர் பரப்பளவு விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்தனர். தற்போது சுமார் 1550 எக்டேர் பரப்பளவு நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேலும் சுமார் 390 எக்டேர் பரப்பளவு மணிலா சாகுபடி செய்யப்பட்டது. இதில் சுமார் 150 எக்டேர் பரப்பளவு தண்ணீரில் மூழ்கியுள்ளன. அதேபோல் சுமார் 290 ஹெக்டேர் பரப்பளவு விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்துள்ளனர். மேலும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 23 ஏரிகள் உள்ளன. இதில் 13 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது. அதேபோல் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் 61 ஏரிகள் உள்ளன. இதில் 36 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது. தொடர்ந்து ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகின்றன தொடர் மழை நீடித்தால் ஓரிரு நாட்களில் அனைத்து ஏரிகளும் நிரம்ப வாய்ப்புகள் உள்ளது. இதேபோல் போளூர், ஜமுனாமரத்தூர் பகுதிகளில் பெய்த கனமழையால் 7280 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாயின.
ஜமுனாமரத்தூரில் இருந்து ஆலங்காயம் வழியாக பீமன் அருவிக்கு செல்லும் வழியில் சாலையின் குறுக்கே வேருடன் மரம் சரிந்து விழுந்தது. அதனை ஒன்றிய குழு தலைவர் எம்.ஜீவாமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் த.செந்தில்குமார் ஆகியோர் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் பகுதி வழியே செய்யாற்று படுகை செல்கிறது. இந்த ஆற்றுப் படுகையில் தண்ணீரை தேக்கி வைக்க வசதியாக அணைக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள குப்பநத்தம் அணை, மிருகண்டா, செண்பகத் தோப்பு உள்ளிட்ட அணையிலிருந்து செய்யாற்று படுகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆற்றுப்படுகையில் வெள்ளம் கரைபுரண்டது. அணைக்கட்டிலிருந்து வெளியேறிய வெள்ளம் ஆரணி-வந்தவாசி பிரதான சாலையில் சூழ்ந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டது. பின்னர் வந்தவாசிநெடுஞ்சாலை துறையினர் வாழைப்பந்தல் கூட்ரோடு அருகே ஆரணி-வந்தவாசி செல்லும் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் செல்ல வலியுறுத்தி பேரிகார்டு அமைத்தனர்.
பீமன் நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை
ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூரில் பீமன் நீர்வீழ்ச்சியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பீமன் நீர்வீழ்ச்சியை காண பல்வேறு பகுதியை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். தற்போது அதிகளவில் வெள்ளம் செல்வதால் பொதுமக்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. பீமன் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கு காரணமாக நாகநதி, கமண்டல ஆறு ஆகிய ஆறுகளிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
The post திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழையால் 10 பேர் பலி: 40 குடிசை வீடுகள் இடிந்து சேதம் appeared first on Dinakaran.