×

சென்னை முகத்துவாரங்களை தூர்வாரும் பணிகள் நிறைவு: டிசம்பர் வரை கண்காணிக்க நீர்வளத்துறை முடிவு

சென்னை: வடகிழக்கு பருவமழை எதிரொலியாக சென்னையில் உள்ள முகத்துவாரங்களை தூர்வாரும் பணிகள் முடிந்தது. டிசம்பர் வரை தொடர்ந்து கண்காணிக்க நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். வங்ககடலில் கடந்த 23ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. நேற்று காலை ஆழ்ந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் வலுவடைந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக தீவிரமடைந்தது. நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. புயல் கரையை கடக்கும் போது சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் எதிர்ப்பார்த்த அளவிற்கு மழை இல்லை.

இருப்பினும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. மேலும் அதனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூவம், அடையாறு, கொசஸ்தலை, பக்கிங்காம் கால்வாய் இதனுடன் இணைக்கப்பட்ட 31 கால்வாய்கள், நீர்வள ஆதாரமான 13 கால்வாய்கள், இதனுடன் இணைந்துள்ள 3519 கி.மீ, வடிகாலகள் வழியாக, மழைநீர் வெளியேறுகிறது. குறிப்பாக கடந்தாண்டு அதீத மழை மற்றும் கடல் சீற்றம், உயர் அலைகள், காற்றின் காரணமாக வெள்ள நீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ள நீர் முகத்துவாரங்கள் வழியாக கடலில் வடிவதில் சிரமம் ஏற்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு இந்தாண்டு சென்னை வடிநிலத்தில் வெள்ள தணிப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக எண்ணூர் முகத்துவாரம், கூவம் முகத்துவாரமான நேப்பியர் பாலம் அருகில், அடையாறு முகத்துவாரம், முட்டுக்காட்டு முகத்துவாரம் தூர்வாரப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் ₹38.50 கோடிக்கு 180 பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டு அக்டோபரில் நிறைவடைந்துள்ளது. இப்பணிகளுக்கு 200 இயந்திரங்கள் சுமார் 80,000 மணியளவுக்கு பயன்படுத்தப்பட்டு, 1500 லாரிகள் கொள்ளளவு கொண்ட குப்பை, ஆகாய தாமரை போன்ற கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

மேலும், மேற்கண்ட நீர்வழித்தடங்கள் மற்றும் முகத்துவாரங்கள் டிசம்பர் மாத இறுதி வரை கண்காணிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பு இந்தாண்டு ஏற்பட கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லை என்றாலும் நீர் வழித்தடங்களை தூர்வாருதல், ஆகாயத்தாமரைகள், முகத்துவார அடைப்புகள், மழைநீர் வடிகால்கள் மாற்றியமைத்தல் உள்ளிட்ட பணிகள் பருவமழைக்கு முன்பே முடிக்கப்பட்டது. இந்த பணிகள் டிசம்பர் இறுதி வரை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும். அதேபோல் நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார்.

The post சென்னை முகத்துவாரங்களை தூர்வாரும் பணிகள் நிறைவு: டிசம்பர் வரை கண்காணிக்க நீர்வளத்துறை முடிவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Water Department ,Bangladesh ,Dinakaran ,
× RELATED பள்ளி பாடபுத்தகங்களில் வங்கதேச தந்தை...