×
Saravana Stores

புதுகை அருகே பரபரப்பு; வேலுமணி நண்பர் வீட்டில் ஈடி சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

* தொடர் சோதனைகளால் கலக்கத்தில் அதிமுக தலைவர்கள்

சென்னை: புதுக்கோட்டை அருகே அதிமுக நிர்வாகியும் வேலுமணி நண்பர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக நிர்வாகிகளை குறி வைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதால் தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். துக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சியை சேர்ந்தவர் முருகானந்தம்(53). புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பாஜக பொருளாளர். இவரது அண்ணன் ரவிசந்திரன்(55), தம்பி பழனிவேல்(50). இதில் பழனிவேல் அதிமுக மாவட்ட இளைஞர் அணி செயலாளராக உள்ளார். ரவிச்சந்திரன் கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் துணை பிடிஓவாக பணியாற்றி வருகிறார். முருகானந்தமும், பழனிவேலும் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக முழுவதும் சோலார் தெரு விளக்குகள் அமைக்கும் ஒப்பந்தம் மற்றும் பல்வேறு பொதுப்பணித்துறை ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வந்தனர். இவர்கள் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் கடந்த 2022ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இவர்களது வீடுகளில் சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், இந்த விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்றங்கள் நடந்திருப்பதாக தெரியவந்ததை தொடர்ந்து அமலாக்கத்துறை இந்த வழக்கு தொடர்பான விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடமிருந்து கேட்டுப்பெற்றது. அதனடிப்படையில் மதுரை, சென்னையிலிருந்து அமலாக்கத்துறையினர் 20 பேர் 7 வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் இன்று அதிகாலை புதுக்கோட்டைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் குழுக்களாக பிரிந்து காலை 6.30 மணிக்கு புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள முருகானந்தம் வீட்டுக்கு வந்தனர். அங்கு வீட்டின் கதவு, ஜன்னல்களை அடைத்ததுடன், வீட்டிலிருந்த அனைவரது செல்போன்களையும் வாங்கி வைத்துக்கொண்டனர். பின்னர் வீடு முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்.

இதேபோல் கருக்காகுறிச்சியில் உள்ள அவரது மற்றொரு வீட்டிலும் ஒரு குழுவினர் சோதனையிட்டு வருகின்றனர். இதேபோல் கருக்காகுறிச்சியில் உள்ள ரவிச்சந்திரன், பழனிவேல் வீடுகளிலும் காலை 6.30 மணி முதல் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் சோலார் விளக்குகள் ஒப்பந்தம் எடுத்து பணி செய்த பழனிவேலின் நண்பரான ஆலங்குடி கே.வி.எஸ் தெருவில் உள்ள மற்றொரு பழனிவேல் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் புதுக்கோட்டையில் பெட்ரோல் பங்க் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சோதனை நடைபெறும் 5 இடங்களிலும் பாதுகாப்பு பணியில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனை புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பர் இளங்கோவன் வீடு, கல்லூரிகள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் ரூ.40 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எடப்பாடிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது வேலுமணியின் நண்பர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்னர், நெல்லையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆர்.எஸ்.முருகன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இவர்தான் தென் மாவட்டங்களில் அதிமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலை டெண்டர் எடுத்தவர். எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவராக இருந்தார். இவ்வாறு அதிமுக தலைவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் ரத்தினம். இவரது வீடு மற்றும் அலுவலகம் நகரில் உள்ள ஜி.டி.என் சாலையில் உள்ளது. இவர், தரணி குழுமம் என்னும் பெயரில் திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டையில் கல்வி நிறுவனம், வீடு கட்டுமானம், ரியல் எஸ்டேட், செங்கல் டிரான்ஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில், மணல் குவாரியில் நடந்த சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை தொடர்பாக கடந்த 2023 செப்.12 மற்றும் 13ம் தேதிகளில் திண்டுக்கல்லில் உள்ள ரத்தினம் வீடு மற்றும் அலுவலகம், ஹனிபா நகரில் உள்ள ரத்தினத்தின் மைத்துனர் கோவிந்தன் வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து 2வது முறையாக 2023 நவ.25ம் தேதி ஜி.டி.என் சாலையில் உள்ள ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று மூன்றாவது முறையாக ஜி.டி.என் சாலையில் உள்ள தரணி குழும அலுவலகத்தில் அமலாக்க துறை அதிகாரிகள் காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு கார்களில் வந்த 6 பேர் கொண்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது முறையாக தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

The post புதுகை அருகே பரபரப்பு; வேலுமணி நண்பர் வீட்டில் ஈடி சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Bustle ,Pudugai ,Velumani ,AIADMK ,Chennai ,Pudukottai ,Puducherry ,Dinakaran ,
× RELATED மேல்மருவத்தூர் அருகே பரபரப்பு;...