×

மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலை வாய்ப்புக்கு டைடல் பார்க்; அமைச்சர் ஆய்வு

ஊட்டி : நீலகிாி மாவட்டத்தில், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உள்ளூரிலேயே ஏற்படுத்தி தரும் வகையில் புதிய தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) அமைப்பது குறித்து தொழில்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக சுற்றுலா மற்றும் தேயிலை விவசாயம் உள்ளது. சுற்றுலா மற்றும் தேயிலைத்தொழிலை நம்பி மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். தேயிலை தொழிற்சாலைகள் தவிர வேலைவாய்ப்புகளை வழங்கிடும் பிற தொழில் சார்ந்த தொழிற்சாலைகள், நிறுவனங்கள் நீலகிரியில் இல்லை.

இதனால் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்களது பள்ளி கல்வியை நீலகிரியில் படித்து முடித்தவுடன் உயர்கல்விக்காக கோவை, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு செல்கின்றனர். படித்து முடித்த பின் சமவெளி பகுதிகளிலேயே வேலை தேடி கொள்கின்றனர். தகவல் தொழிற்நுட்பம் சார்ந்த படிப்புகளை பயின்ற இளைஞர்கள் அந்த வேலைவாய்ப்புகளை வழங்க கூடிய கோவை, சென்னை மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகாவின் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு சென்று விடுகின்றனர்.

இதுதவிர பெரும்பாலான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளூரிலேயே கிடைக்கும் வேலையை செய்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு நீலகிரியில் ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படும் வகையிலான சூழலை ஏற்படுத்த வேண்டும். டைடல் பார்க் போன்ற ஐடி நிறுவனங்களை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்னும் கோரிக்கை இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து நீலகிரி தொகுதி எம்பி ஆ.ராசா நீலகிரி மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் ஊட்டியில் ஐடி நிறுவனம் கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத்தை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தமிழகத்தில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.

இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என கடந்த 2022ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. தொடர்ந்து ஊட்டியில் இதற்காக ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் குன்னூர் பத்துமை மற்றும் எடப்பள்ளி செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான இடங்களை தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் உடனிருந்தனர். ஆய்விற்கு பின்னர் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அயராத உைழப்பினால் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார். அந்த வகையில் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் புதிய தொழில்நுட்ப பூங்கா கட்டுவதற்கான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த பூங்காவானது புதிய தொழில்நுட்ப வடிவத்தில் இங்கு அமைய உள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த புதிய தொழில்நுட்ப பூங்கா அமையவுள்ள இடமானது ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளுக்கு மிக அருகாமையில் இருக்கிறது. முதலமைச்சரின் அனுமதி பெற்று தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) அமையும் பட்சத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, முன்னாள் அரசு கொறடா முபாரக், குன்னூர் நகராட்சி துணை தலைவர் வாசிம் ராஜா, குன்னூர் வட்டாட்சியர் கனிசுந்தரம், குன்னூர் நகராட்சி பொறியாளர் வேலுசாமி உட்பட பலர் உடனிருந்தனர். இதனிடையே கோவை போன்ற பெருநகரங்களில் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் அதிகரிக்க துவங்கியுள்ளன. இதனால் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

தற்போது மலை மாவட்டமான நீலகிரியில் டைடல் பார்க் அமைக்கப்படும் பட்சத்தில் படித்த இளைஞர்கள் வேலை தேடி பெங்களூரு, சென்னை போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது. உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டம் வரவேற்க கூடிய திட்டம் என பொதுமக்கள் தரப்பில் கருத்து தெரிவித்தனர்.

The post மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலை வாய்ப்புக்கு டைடல் பார்க்; அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tidal Park ,Nilgai ,Nilgiri district ,
× RELATED மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா.....