×

ஆறுமுகநேரி மெயின் பஜாரில் கட்டுப்பாடின்றி கூட்டமாக சுற்றித்திரியும் நாய்களால் வாகனஓட்டிகள் கடும் அவதி

*விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி மெயின் பஜாரில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் கால்நடைகளால் கடும் அவதிக்கும், அச்சத்திற்கும் உள்ளாகும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், இந்த பிரச்னைக்கு விரைவில் கடிவாளம் போட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா? என எதிர்பார்க்கின்றனர்.ஆறுமுகநேரி மெயின் பஜாரில் உளள வார சந்தை மற்றும் கடைகளுக்கு பொதுமக்கள் தினமும் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். மெயின் பஜாரின் வழியாக நான்கு திசைகளில் இருந்து பள்ளிகளுக்கு நடந்து மற்றும் சைக்கிளில் மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர்.

மேலும் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலை ஆறுமுகநேரி வழியாக திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் பாத யாத்திரையாகவும், வாகனங்களிலும் சென்று வருகின்றனர். தற்போது சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று திரும்பி வரும்போது ஆறுமுகநேரி பகுதிகளில் ஆங்காங்கே சாலை ஓரம் நிழல் உள்ள இடங்களில் அமர்ந்து காலை, மதியம், இரவு நேரங்களில் உணவு சாப்பிட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் ஆறுமுகநேரி மெயின் பஜாரில் இருந்து தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை ஆறுமுகநேரி, காயல்பட்டினம் மற்றும் மூலக்கரை சாலை ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இவ்வழியாக சைக்கிள், பைக், வாகனங்கள் மற்றும் பாத யாத்திரையாக செல்லும் பொதுமக்கள், பக்தர்களையும் இந்த தெருநாய்கள் துரத்தி அச்சுறுத்தி வருகின்றனர்.

மேலும் சாலைகளில் கும்பலாக திரியும் நாய்களுக்கு இடையே சண்டைகள் வரும்போது அவ்வழியாக நடந்து மற்றும் சைக்கிளில் வரும் பள்ளி மாணவ-மாணவிகள் பதறி கீழே விழுந்து செல்லும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள ஆறுமுகநேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் நாய் கடிக்காக 5க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆறுமுகநேரி மெயின் பஜார் மற்றும் நான்கு திசைகளில் உள்ள சாலைகளில் மாடுகள் உலா வருவதும், இரவு நேரங்களில் சாலை மற்றும் பஸ் நிறுத்தம் பகுதியில் உறங்குவதும் வழக்கமாக உள்ளது. இப்பகுதியில் அதிகரித்துள்ள தெரு நாய்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயமும் குறைந்தபாடில்லை.

இதனால் கடும் அவதிக்கும், அச்சத்திற்கும் உள்ளாகும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், இந்த பிரச்னைக்கு விரைவில் கடிவாளம் போட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா? என எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக மக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்தவும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பறிமுதல் செய்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

The post ஆறுமுகநேரி மெயின் பஜாரில் கட்டுப்பாடின்றி கூட்டமாக சுற்றித்திரியும் நாய்களால் வாகனஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Arumuganeri Main Bazaar ,Arumukaneri ,Arumukaneri main bazaar ,Arumuganeri ,Main ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து ஆறுமுகநேரியில் மதிமுக ஆர்ப்பாட்டம்