×
Saravana Stores

பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்டில் படுத்தே விட்டானய்யா ஆஸி… 104க்கு ஆல் அவுட்டாகி சரண்டர்; பேட்டிங்கில் பட்டை கிளப்பிய ஜெய்ஸ்வால் – ராகுல்

பெர்த்: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்டின் 2ம் நாளான நேற்று, ஆஸி 104 ரன்னுக்கு சுருண்டது. பின் களமிறங்கிய இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால், ராகுலின் பொறுப்பான ஆட்டத்தால் விக்கெட் இழப்பின்றி இந்தியா 172 ரன் எடுத்துள்ளது. ஆஸி சுற்றுப்பயணம் சென்றுள்ள ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. பெர்த் நகரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியின்போது முதல் இன்னிங்சில் இந்தியா 150 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பின் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸி, 67 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்து பரிதாப நிலையில் இருந்தது. இந்நிலையில், 2ம் நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸி அணி வீரர்கள் அதிக நேரம் நிலைக்கவில்லை. இறுதியில் 104 ரன்னுக்கு ஆஸி ஆல் அவுட்டானது.

இதைத் தொடர்ந்து, 46 ரன் முன்னிலையுடன், 2ம் இன்னிங்சை இந்தியா துவக்கியது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுலும் மிக நிதானமாகவும் பொறுப்பாகவும் ஆடினர். முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன ஜெய்ஸ்வால் மிகவும் சிறப்பாக ஆடி, 90 ரன்னுடன் களத்தில் உள்ளார். இதில், 2 சிக்சர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும். மற்றொரு துவக்க வீரர் ராகுல், 62 ரன்னுடன் களத்தில் உள்ளார். ஆட்ட நேர முடிவில் அணியின் ஸ்கோர் விக்கெட் இழப்பின்றி 172 ஆக இருந்தது. இதன் மூலம், இந்திய அணி, 218 ரன் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 1986ல், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கவாஸ்கர் – ஸ்ரீகாந்த் ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 191 ரன் குவித்து சாதனை படைத்தனர். 38 ஆண்டுக்கு பின் ஆஸி மண்ணில் அந்த சாதனையை ஜெய்ஸ்வால் – ராகுல் ஜோடி முறியடிப்பார்களா என்ற ஆவல் ரசிகர்களை தொற்றிக் கொண்டுள்ளது.

* ஒரே ஆண்டில் 34 சிக்சர் சாதித்தார் ஜெய்ஸ்வால்
கடந்த 2014ல் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில், 33 சிக்சர் விளாசிய நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். நேற்றைய போட்டியில் ஜெய்ஸ்வால் 2 சிக்சர் விளாசியதை அடுத்து, ஒரு ஆண்டில் அதிகபட்சமாக, 34 சிக்சர் விளாசிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி உள்ளார். 10 ஆண்டுக்கு பின் மெக்கல்லமின் சாதனையை ஜெய்ஸ்வால் தகர்த்துள்ளார்.

ஆஸியின் லோ ஸ்கோர் பரிதாபங்கள்
* ஆஸி அணி, ஒரு இன்னிங்சில் 104 அல்லது அதற்கு குறைவான ரன்னில் ஆட்டமிழப்பது, இது 47வது முறை.
* அதே நேரத்தில் முதல் இன்னிங்சில் மட்டும் 26வது முறையாக 104 ரன்னுக்குள் ஆஸியின் ஆட்டம் அடங்கிப் போயிருக்கிறது.
* எந்த இன்னிங்சாக இருந்தாலும் 100 ரன்னுக்குள் ஆஸி 39 முறை ஆட்டமிழந்துள்ளது. அவற்றில் 4 முறை மட்டுமே ஆஸியை அடக்கியுள்ளது இந்தியா.
* ஆனால் ஒரு முறை கூட ஆஸியை, முதல் இன்னிங்சில் 100 ரன்னுக்குள் இந்தியா சுருட்டியதில்லை.
* இந்தியாவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் ஆஸி பதிவு செய்த குறைந்தபட்ச ரன் நேற்றைய 104.
* இதற்கு முன், முதல் இன்னிங்சில் ஆஸி அணி குறைந்த பட்சமாக 104 அல்லது அதற்கு குறைவாக ரன் எடுத்த 25 ஆட்டங்களில், 2ல் வெற்றியும், 2ல் டிராவும் பெற்றுள்ளது. எஞ்சிய 21 ஆட்டங்களில் ஆஸிக்கு தோல்வி மட்டுமே கிடைத்துள்ளது.

The post பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்டில் படுத்தே விட்டானய்யா ஆஸி… 104க்கு ஆல் அவுட்டாகி சரண்டர்; பேட்டிங்கில் பட்டை கிளப்பிய ஜெய்ஸ்வால் – ராகுல் appeared first on Dinakaran.

Tags : – ,Gavaskar Cup Test ,Patte Vittanaiya ,Jaiswal-Rahul ,Perth ,Aussies ,India ,Jaiswal ,Rahul ,Aussie ,Vittanaiya ,Aussie… ,Jaiswal - ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல் கல்...