- ஜெய்ஸ்வால் 161
- கோஹ்லி 100
- இந்தியா
- இமயமலை
- ஆஸ்திரேலிய வீரர்களான
- ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி
- ஜெயஸ்வால்
- ஆஸி
- தின மலர்
பெர்த்: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்டின் 3ம் நாளான நேற்று ஆட்டத்தை தொடர்ந்த நம் வீரர்களின் அசகாய பேட்டிங்கால் இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன்னுடன் டிக்ளேர் செய்தது. 534 ரன் வெற்றி இலக்குடன் 2ம் இன்னிங்சை தொடர்ந்த ஆஸி அணி, 12 ரன்னில் 3 விக்கெட் இழந்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. ஆஸி சுற்றுப்பயணம் சென்றுள்ள ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது.
பெர்த் நகரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியின்போது முதல் இன்னிங்சில் இந்தியா 150 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பின் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸி, மிக மோசமாக ஆடி 104 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால், இந்தியா 46 ரன் முன்னிலை பெற்றது. இந்நிலையில், 2ம் இன்னிங்சை துவக்கிய இந்திய துவக்க வீரர்கள் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 2ம் நாள் ஆட்ட இறுதியில், இந்தியா விக்கெட் இழப்பின்றி 172 ரன் எடுத்திருந்தது. துவக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், 90 ரன்னுடனும், கே.எல். ராகுல், 62 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்தது. நேற்றைய போட்டியிலும் அற்புத ஆட்டத்தை ஜெய்ஸ்வால் வெளிப்படுத்தினார். 297 பந்துகளை எதிர்கொண்ட அவர், 161 ரன்னுக்கு, மார்ஷ் பந்தில், ஸ்மித்திடம் கேட்ச் தந்து அவுட்டானார். தொடர்ந்து ராகுலும், 77 ரன்னில், ஸ்டார்க் பந்தில் வீழ்ந்தார். பின் வந்த தேவ்தத் படிக்கல் 25, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 1, துருவ் ஜுரெல் 1 ரன்னுக்கு அவுட் ஆன போதும், நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோஹ்லி நிலைத்து ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
வாஷிங்டன் சுந்தர் 29ல் அவுட் ஆனார். 134வது ஓவரின்போது, கோஹ்லி, 2 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 100 ரன் எடுத்து சதத்தை நிறைவு செய்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது. அப்போதைய ஸ்கோர், 6 விக்கெட் இழப்புக்கு 487. நிதிஷ் குமார் ரெட்டி 2 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸியின் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட், பேட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். நாதன் லியோன் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 534 ரன் வெற்றி இலக்கை நோக்கி ஆஸி அணி, 2ம் இன்னிங்சை தொடர்ந்தது.
துவக்க வீரர் நாதன் மெக்ஸ்வீனி, பும்ராவின் மாயப் பந்து வீச்சில் ரன் எடுக்காமல் வீழ்ந்து ஆஸி ரசிகர்களை நோகடித்தார். ஆஸி மானம் காக்க அரங்கில் நுழைந்த கேப்டன் பேட் கம்மின்ஸ், 2 ரன் எடுத்து, முகம்மது சிராஜின் அற்புத பவுலிங்கில் கோஹ்லியிடம் கேட்ச் தந்து விக்கெட்டை பறிகொடுத்தார். பின் வந்த மர்னஸ் லபுஸ்சக்னே, பும்ரா புயலாய் வீசிய பந்தை சமாளிக்க முடியாமல், எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். 3ம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸி அணி, 3 விக்கெட் இழப்புக்கு 12 ரன் மட்டுமே எடுத்து தோல்விச் சுழலில் சிக்கித் தவித்தது. இன்னும் 2 நாட்கள் முழுமையாக உள்ளதால் ஆஸியின் தோல்வி நிச்சயமாகி உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
* கவாஸ்கரின் சாதனையை முறியடித்த கோஹ்லி
இந்த போட்டியில் தனது 30வது சதத்தை கோஹ்லி விளாசி உள்ளார். இதன் மூலம், கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் 29 செஞ்சுரி சாதனையை அவர் முறியடித்துள்ளர். தவிர ஆஸி மண்ணில் அதிகபட்சமாக 7 சதங்களை விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையையும் கோஹ்லி நிகழ்த்தி உள்ளார். 6 சதங்களுடன் அந்த இடத்தில் இதுவரை சச்சின் டெண்டுல்கர் இருந்து வந்தார்.
சாதிக்க பிறந்த ஜெய்ஸ்வால்: தொடர்ந்து தகரும் சாதனைகள்
* நேற்றைய போட்டியில் 161 ரன் குவித்த, 22 வயதே ஆன யஷஸ்வி ஜெய்ஸ்வால், 15 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில், 1568 ரன்களுடன் 4ம் இடம் பிடித்தார். 23 வயதுக்கு முன் இத்தகைய சாதனையை படைத்த எலைட் வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார். பழம் பெரும் இந்திய வீரர் விஜய் ஹஸாரேவின், 15 போட்டிகளில் 1420 ரன் சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
* இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன், 2115 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். மார்க் டெய்லர் 1618, எவர்டன் வீக்ஸ் 1576 ரன்களுடன் 2 மற்றும் 3ம் இடத்தில் உள்ளனர். 1560 ரன்னுடன், 5ம் இடத்தில் மைக்கேல் ஹஸி உள்ளார்.
* நடப்பு 2024ம் ஆண்டில் 3 செஞ்சுரிகளை விளாசியுள்ள ஜெய்ஸ்வால், ஒரு காலண்டர் ஆண்டில் 23 வயதுக்கு முன், 3 சதங்கள் அடித்த மெகா வீரரகள் பட்டியலிலும் இணைந்துள்ளார். இதற்கு முன், இங்கிலாந்து அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்டில் 209 ரன், ராஜ்கோட்டில் நடந்த டெஸ்டில் அவுட்டாகாமல் 214 ரன் எடுத்து ஜெய்ஸ்வால் அசத்தி உள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, ரவி சாஸ்திரி உள்ளனர்.
* ஆஸ்திரேலியாவில் ஆடிய முதல் ஆட்டத்திலேயே சதம் விளாசிய வீரர் பட்டியலிலும் ஜெய்ஸ்வால் இணைந்துள்ளார். இத்தகைய சாதனைக்கு, ஜெய்சிம்ஹா, சுனில் கவாஸ்கர் ஆகியோரும் சொந்தக்காரர்கள்.
* முன்னதாக, 2023ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக, டொமினிகாவில் நடந்த போட்டியின் மூலம் இந்திய அணியில் புத்தம் புதிய மலராக அறிமுகமான ஜெய்ஸ்வால், 171 ரன் எடுத்து பலரது புருவங்களை உயர்த்த செய்தார்.
* நேற்று முன்தினம் நடந்த போட்டியின்போது, ஒரே ஆண்டில் அதிகபட்சமாக 34 சிக்சர் விளாசிய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்திருந்தார். நேற்றைய ஆட்டத்தின்போது மேலும் ஒரு சிக்சர் அடித்து, சாதனை சிக்சர் எண்ணிக்கையை 35 ஆக அவர் உயர்த்தி உள்ளார்.
The post ஜெய்ஸ்வால் 161, கோஹ்லி 100 ரன் குவிப்பு: ரன் குவிப்பில் சிறகடித்து பறந்த இந்தியா சாகச வெற்றிக்கு இமாலய இலக்கு 534: 12க்கு 3ஐ இழந்து ஆஸி சோக கீதம் appeared first on Dinakaran.