×

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சாலை, வீடுகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் பாதிப்பு

*வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

*மழைநீரை அகற்றும் பணி தீவிரம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும், இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 2 நாட்களில் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக நவ.24ம் தேதி தமிழ்நாட்டில் மழை பெய்யும் என தெரிவித்த நிலையில், மன்னார் வளைகுடா கடல் மாவட்டமான ராமநாதபுரத்திற்கு நேற்று ரெட் அலார்ட் விடப்பட்டது.

ஆனால் நேற்று முன்தினம் இரவு முதல் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் அதிகாலை முதல் பனி மூட்டத்துடன் கூடிய சிறு மழை பெய்து வருவதால் ராமேஸ்வரம், திருஉத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, தேவிப்பட்டிணம் மற்றும் ஏர்வாடி தர்ஹா சுற்றுலா தலங்களுக்கு வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள், உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர்.

மேலும் ராமநாதபுரம், ராமேஸ்வரம்,பரமக்குடி ஆகிய நகராட்சி பகுதிகள், முதுகுளத்தூர், சாயல்குடி, மண்டபம் உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகள், ஊராட்சி பகுதிகளில் தண்ணீர் தேங்கிய இடங்களில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மீனவர்கள் இரண்டாவது நாளாக மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.புகழ்பெற்ற திருஉத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயிலில் முறையான மழைநீர் வழித்தடங்கள் உள்ளன.
இருந்தபோதிலும் கனமழை பெய்து வருவதால், பெருக்கெடுத்தோடி கோயில் உள்ள உள்பிரகார பகுதிகளில் பெருகியது. இதனை கோயில் நிர்வாகம் சார்பில் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்ராஜ் கூறும்போது, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் விடப்பட்டுள்ளதால், அந்தந்த பகுதிகளின் நிலைமைக்கு ஏற்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து உரிய நேரத்திற்குள் விடுமுறை விட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மண்டபம் பேரூராட்சி பகுதியில் கடந்த 19ம் தேதி இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மூன்றாவது நாட்களாக நேற்று மாலை வர கனமழை பெய்தது. அதுபோல மேகங்களும் நேற்று இருண்டு மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் மூன்று நாட்களாக பெய்த மழையில் மண்டபம் பேரூராட்சி பகுதியில் பல்வேறு தெருக்களில், சாலைகளிலும், வீடுகளிலும் மழைநீர் சூழ்ந்து தேக்கம் அடைந்தது.

இதனால் வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். மண்டபம் காந்தி நகர் பகுதியில் மழைநீர் தேக்கம் அடைந்ததால் அந்த பகுதியில் குடியிருந்த பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் தவித்து வருகின்றனர். அதுபோல அந்த பகுதியில் உள்ள மீனவ குடியிருப்பு இருந்த 30க்கும் மேற்பட்ட குடும்பங்களை பேரூராட்சி நிர்வாகம் மண்டபம் பேரூராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு பேரிடர் மீட்பு மையம் கட்டிடத்தில் தங்க வைத்துள்ளனர்.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீனவ மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் இந்த கட்டிடத்திலேயே இரண்டு நாட்களாக தவித்து வருகின்றனர். அதுபோல மண்டபம் கேம்ப் அருகே முனைக்காடு பகுதிக்கு செல்லும் சாலையிலும் மழைநீர் தேக்கம் அடைந்ததால் அந்த பகுதியில் வாகனங்களில் பொதுமக்கள் செல்ல முடியாமல் தவித்தனர்.

அதுபோல மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகர், பெரியார் நகர், எருமை தரவை ஆகிய பகுதிகளில் வீடுகளை மழைநீர் அதிகமாக சூழ்ந்து தேக்கம் அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வேறு வழியின்றி மழைநீரில் நடந்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. அந்த பகுதிகளில் பறந்த நிலப்பரப்பு இருப்பதால் மண்டபம் பகுதியை சேர்ந்த அனைத்து மழைநீர்களும் அங்கே வந்து தேக்கம் அடைந்து வருகிறது. பேரூராட்சி நிர்வாகத்தினர் மழைநீரை அகற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாக உள்ளது.

மழைக்கு சாய்ந்த மரம்

பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கிய பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குச் செல்லும் மாணவ,மாணவிகள் மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு சென்று வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. காற்றுடன் கூடிய மழை பெய்ததில் நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. தொடர்ந்து மின்சார வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் மரத்தை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு மரத்தை அப்புறப்படுத்தினர்.

The post தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சாலை, வீடுகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,South East Bay of Bengal ,Dinakaran ,
× RELATED பெஞ்சல் புயல் உருவான நிகழ்வும் கடந்து வந்த பாதையும்