சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மெரினா கடற்கரை உள்ளது. நாள்தோறும் அந்த கடற்கரையில் நடைப் பயிற்சிக்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரளுகின்றனர். மேலும் சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் மெரினா கடற்கரை திகழ்கிறது. மாலை நேரங்களில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக வார இறுதி நாட்கள் காணும் பொங்கல் உள்ளிட்ட நாட்களில் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர்.
மேலும் தலைவர்களின் நினைவிடங்களும் அமைந்து இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மெரினா கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஏற்கனவே நீச்சல் குளம், பூங்காக்கள், வாக்கிங் நடைபாதை, ராம்ப் வாக் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மெரினா கடற்கரையில் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையான மெரினாவில் கூடுதலாக வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மெரினா கடற்கரையின் இயற்கையை ரசிக்கும் வகையில் ரோப் கார் சேவையை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. இதையடுத்து சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரோப் கார் சேவை அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்தது. எனவே, இந்த திட்டம் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
ஏற்கனவே, சென்னை மாநகராட்சி சார்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பசுமை சென்னை, கலாச்சாரம் மிகு சென்னை, தூய்மை சென்னை, நீர்மிகு சென்னை, எழில்மிகு சென்னை, நலம்மிகு சென்னை, கல்விமிகு சென்னை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ராட்சத ராட்டினங்களை உள்ளடக்கிய பூங்காக்களை உருவாக்குதல், கடற்கரை சாலைகளை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மூலம் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் தான், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் நகரை அழகுபடுத்த புதுவித யோசனைகளை முன்வைக்குமாறு மாநகராட்சி கவுன்சிலர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கேட்டுக் கொண்டார். அதில் ஏராளமான புதிய யோசனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான கவுன்சிலர்கள் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவையை தொடங்கலாம் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதை தொடர்ந்தே இந்த திட்டத்துக்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பான பேச்சுகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவைக்கான கட்டுமான பணிகளுக்கு சென்னை மாநகராட்சி டெண்டர் கோரி உள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெண்டரில், திட்ட வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள், ஆலோசனை, விரிவான அறிக்கை, மதிப்பாய்வு உள்ளிட்டவற்றை அளிக்கலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதிக்குள் இணையதளம் மூலம் இந்த டென்டருக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதன் மூலம் சென்னை மக்களின் நீண்டகால கோரிக்கையான ரோப் கார் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post சென்னை மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற முடிவு மெரினா கடற்கரையின் இயற்கையை ரசிக்க விரைவில் ரோப் கார் சேவை: கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி appeared first on Dinakaran.