×

69,978 ஹெக்டேர் விளைநிலங்கள் பயன்பெற தோணி மடுவு திட்டம் நிறைவேற்றப்படுமா?: விவசாயிகள் எதிர்பார்ப்பு

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப் பகுதியில் தேவர்மலை,கடை ஈரட்டி,ஈரட்டி, சோளகனை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து மழைகாலத்தில் வரும் தண்ணீரை சேமித்து அந்தியூர், அம்மாபேட்டை பவானி பகுதி ஏரிகளுக்கு நிரப்புவதே தோணிமடுவு தடுப்பணை திட்டமாகும். கடந்த 1980ம் ஆண்டு முதல்,கொளத்துார்,தோணிமடுவு பாசன விவசாயிகளும்,2018 லிருந்து தோணிமடுவு தடுப்பணை பாசன விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கூட்டமைப்பினரும், தோணிமடுவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இத்திட்டம் குறித்து ஆய்வுக்காக எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் 15 கி.மீ நடந்து இப்பகுதியில் ஆய்வு செய்து அதனுடைய அறிக்கையை தமிழக முதல்வருக்கும்,பொதுப்பணித்துறையினருக்கும் அனுப்பியதோடு, சட்டப்பேரவையிலும் மானிய கோரிக்கையின்போது பேசினார். தற்போது தோணிமடுவு தடுப்பணை திட்டத்தை செயல்படுத்த, முதல் கட்டமாக ரூ.5 லட்சம் ஆய்வுக்காக தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

விரைவில் தோனி மடுவு திட்ட தடுப்பணை கட்டி ஏரிகளில் தண்ணீர் நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து, தோணிமடுவு தடுப்பணை பாசன விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிவானந்தம் கூறுகையில்: பர்கூர் மலைப் பகுதி வழியாக வரும் காட்டாற்று தண்ணீர், சேலம் மாவட்டம், பெரியதாண்டா வழியாக மேட்டூர் அணையில் கலக்கிறது.இந்நீரை பெரியதண்டாவிலிந்து அந்தியூர், அம்மாபேட்டை,பவானி பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கும்,சேலம் மாவட்டத்தில், கொளத்தூர் பகுதியில் உள்ள ஏரிகளுக்கும் திருப்ப விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
திமுக.,வின் தேர்தல் அறிக்கையில் தோணிமடுவிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்துவோம் என அறிவித்திருந்தனர்.ஆட்சி பொறுப்பேற்றதும் நடந்த முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில், நீர்வளத்துறை மானியக் கோரிக்கையில், இத்திட்டம் சம்பந்தமாக, மேட்டூர் எம்எல்ஏ., சதாசிவம் பேசினார்.

அப்போது, பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வனத்துறைக்கு சொந்தமான 120 ஏக்கர் நிலத்தை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால், வனத்துறைக்கு, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 720 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும் என்ற விதி உள்ளதால், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல் உள்ளது என்றார். அதே கூட்டத் தொடரில், எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம், பெரியதண்டாவிலிருந்து தடுப்பணை கட்டி, விவசாயிகளும், பொதுமக்களும் தண்ணீரை பயன்படுத்த, தோணிமடுவு தடுப்பணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் அமைச்சர் துரைமுருகன், தோணிமடுவு தடுப்பணை திட்ட ஆய்வுப் பணிக்கு ரூ.5 லட்சம் ஒதுக்கினார். இதை தொடர்ந்து, ஈரோடு பொதுப்பணித்துறை, வனத்துறை அலுவலர்கள், ஐந்து முறை ஆய்வு நடத்தினர்.அப்போது, தோணிமடுவு பள்ளத்தாக்கில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில், நான்கு இடத்தில் ஆய்வு நடத்தி தடுப்பணை கட்ட ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட அவ்விடத்தில் தடுப்பணை கட்டினால்,எவ்வளவு டிஎம்சி., தண்ணீரை சேமிக்கலாம், எத்தனை ஏரிகளுக்கு பயன்படுத்தலாம் என்பதை திட்ட அறிக்கையாக,மாநில வனத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் சென்னை கிண்டியில் உள்ள மத்திய வனத்துறை அலுவலகத்துக்கும் அனுப்பியுள்ளனர். இதுசம்பந்தமாக, ஈரோடு வனத்துறை அலுவலர்களிடம், மத்திய வனத்துறை அலுவலர்கள், நான்கு முறை விளக்கம் கேட்டனர்.இத்திட்டத்தினால், மரம், செடி, கொடி, வன விலங்குகள் எதுவும் பாதிக்கப்படாது என அறிக்கையளித்துள்ளனர். இத்திட்டத்தில், பெரியதண்டாவில் தடுப்பணை அமைத்து, ஏற்கனவே, வனவிலங்குகள் வனத்திலிருந்து வெளியேறாமல் இருக்கு அமைத்துள்ள அகழி வழியாக, சுமார் 46 கி.மீ தொலைவில் தண்ணீரை கொண்டு வரலாம்.

இதற்கு, வனத்துறை அகழிகளையும், ஏற்கனவே உள்ள கால்வாய்களையும், அகலப்படுத்தி, ஆழப்படுத்தி, சீர்படுத்தினால் போதும். வேறு புதிகாக கால்வாய்கள் எதுவும் வெட்ட தேவையில்லை.இந்த திட்டம் செயல்படுத்தபடுமாயின், கொளத்துார்,பவானி,அந்தியூர்,அம்மாபேட்டை பகுதிகளில் உள்ள, 69 ஏரிகள், 91 குளங்கள், 172 தடுப்பணைகள், 39 பஞ்சாயத்துகளில் உள்ள 352 ஊர்கள்,12 ஆயிரம் போர்வெல்,5781 கிணறுகள், 69, 978 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதில் நீதிபுரம், ஏழரைமத்தி, செம்மலை ஏரி,கரடிப்பட்டியூர், கொமராயனுார், தொட்டிகிணறு, பாப்பாத்திக்காட்டு ஏரி,குருவரெட்டியூர், ஜரத்தல், மூலையூர் உள்ளிட்ட ஏரிகள்,கால்வாய் மூலமும், மூலையூரிலிருந்து பம்பிங் சிஸ்டம் மூலம், எண்ணமங்கலம் ஏரிக்கும் தண்ணீரை கொண்டு செல்லலாம். தடுப்பணை திட்டத்துக்கு, மாநில வனத்துறை, பொதுப்பணித்துறைக்கு அனுமதியளித்துள்ள நிலையில், கிண்டியில் உள்ள மத்திய வனத்துறை பரிசீலனை செய்து வருகிறது.இத்திட்டம் நிறைவேறினால் கொளத்துார்,பவானி,அந்தியூர், அம்மாபேட்டை விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.எனவே தோணி மடுவு தடுப்பணை திட்டத்தை விரைவில் செயல்படுத்திட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

The post 69,978 ஹெக்டேர் விளைநிலங்கள் பயன்பெற தோணி மடுவு திட்டம் நிறைவேற்றப்படுமா?: விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Dhoni ,Andhiyur ,Thonimaduvu ,Devarmalai ,Kadai Eerati ,Eerati ,Solakanai ,Barkur hill ,Andhiur ,Erode district ,Bhavani ,Ammapet ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்ட் தேர்தலில் தோனி வாக்களித்தார்..!!