×

கோலடி ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை அகற்ற நோட்டீஸ் ஒட்டியதால் தச்சுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

பூந்தமல்லி: கோலடி ஏரியில் ஆக்கிரமிப்பு கட்டப்பட்ட தனது வீட்டிற்கு வருவாய் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதால் மனஉளைச்சலில் இருந்த தச்சுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி ஏரியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கட்டுமானங்கள் என மொத்தம் 27 வீடுகளை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறையினர் கடந்த மாதம் இடித்து அகற்றினர்.

மேலும், கோலடி ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 1,263 வீடுகள் மற்றும் கட்டுமானங்களில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். 21 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதியுடன் இருந்து வந்தனர். இதில் கோலடி செல்லியம்மன் நகரில் வசித்து வருபவர் சங்கர்(44). இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இவரது வீட்டிலும் வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். தனது வீட்டை இடித்துவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஏற்கனவே குடும்பத்தாரிடம் சங்கர் தெரிவித்துள்ளார். வருவாய்த்துறையினர் நோட்டீஸ் ஒட்டியதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த சங்கர், நேற்று வீட்டின் அறைக்குள் சென்று நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சங்கர் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீடுகளை அப்புறப்படுத்தி விடுவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதாலேயே தனது கணவர் இறந்து போனதாக சங்கரின் மனைவி திருவேற்காடு போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post கோலடி ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை அகற்ற நோட்டீஸ் ஒட்டியதால் தச்சுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Carpenter ,Koladi Lake ,Tiruvekadu ,Chennai ,Dinakaran ,
× RELATED கோலடி ஏரி விவகாரத்தில் தொழிலாளி...