ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பகுதியில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஊத்துக்கோட்டை அருகே, பெரியபாளையம் ஊராட்சியில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள நேதாஜி நகர் பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால், நேதாஜி நகர் ஊராட்சி மன்ற அலுவலகத்தைச் சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது. மேலும், அப்பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோயில் குளத்திலும் மழை நீர் தேங்கியது. இதனால், கோயில் குளத்தில் இருந்து வெளியேறும் நீரும், அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலும் நேதாஜி நகரில் இருந்து பெரியபாளையம் பஸ் நிலையத்திற்கு செல்ல அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்த, மனு கொடுக்க ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு செல்பவர்களும் கழிவுநீரில் நடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து, பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் பிடிஓ அலுவலகத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், இங்குள்ள பெருமாள் கோயில் குளம் தூர்வாரப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. எனவே, மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தைச் சுற்றி தேங்கியுள்ள மழை நீரை அகற்றவும், கால்வாய் மற்றும் கோயில் குளத்தை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
The post பெரியபாளையம் பகுதியில் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்: பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.