மதுரை : வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில் கல்பனா என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் தலித் ஏழில்மலையின் மருமகன் பிரபல வழக்கறிஞர் காமராஜ். இவர் 2014ம் ஆண்டு கொலைசெய்யப்பட்டார். இவரும் சமீபத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.சென்னை ரெட்டேரி அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் குறித்து சென்னை கொரட்டூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கல்பனா, கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனடிப்படையில், மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு, 2015ம் ஆண்டு முதல் மதுரையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.இந்நிலையில், இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்தி உரிய தீர்ப்பு வழங்க வேண்டும் என 2021ம் ஆண்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, மூன்று மாதங்களில் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனாலும், வழக்கு முடிவுறாத நிலையில், கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் காமராஜின் சகோதரி மேரி தேன்மொழி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மீண்டும் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு மீது நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், “இந்த வழக்கை இவ்வளவு நாள் காலதாமதம் செய்ய என்ன காரணம்? என்பது குறித்து மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்,” என தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் மேற்கண்ட வழக்கில் இன்று மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில் கல்பனா என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்பனாவை தவிர மற்றவர்களை மதுரை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.
The post வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில் கல்பனா என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு!! appeared first on Dinakaran.