×
Saravana Stores

கூடலூரில் கூட்டுறவு வார விழா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

கூடலூர் : கடந்த 14ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை கூட்டுறவு வார விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக 71வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா கூடலூர் ஜானகி அம்மாள் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் நடைபெற்ற விழாவில் குன்னூர் கூட்டுறவு நகர வங்கி துணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் குமாரசுந்தரம் வரவேற்று பேசினார். கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாளன் திட்ட விளக்க உரையாற்றினார்.

அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார். விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 9 குழு பயனாளிகளுக்கு ரூ.9.3 லட்சம் விவசாய கடன்களும், ஏழு குழு பயனாளர்களுக்கு ரூ.51 லட்சம் சுய உதவி கடன்களும் வழங்கி விழா பேசினார். முன்னதாக நந்தட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி அங்கன்வாடியில் நடைபெற்ற ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 164 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் வகையில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் 2வது கட்ட திட்டம் இன்று முதல்வர் தலைமையில் அரியலூரில் துவங்கப்பட்டது. திட்டம் முதல் முறையாக முதல் கட்டமாக நீலகிரி மாவட்டத்திலேயே துவங்கப்பட்டது. இரண்டாவது கட்ட திட்டத்தின் மூலம் கூடலூரில் 164 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. கூட்டுறவு வார விழாவில் விவசாயிகள் குழு மற்றும் சுய உதவி குழுக்களுக்கு ரூ.60 லட்சத்தில் கடன் உதவிகள் வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு திட்டங்கள் மூலம் 1.55 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 164 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட மக்கள் தொகையில் 20% பேருக்கு இந்த கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் ஆட்சியில் தர்மபுரியில் முதல் முதலாக சுய உதவி குழுக்கள் துவக்கப்பட்டு கடன் உதவிகள் வழங்கப்பட்டது. அதேபோல், முதல்வர் ஸ்டாலினும் சுய உதவி குழுக்கள் மற்றும் மகளிருக்கு ஏராளமான திட்டங்களை உருவாக்கி முன்னுரிமை அளித்து அவர்களின் வாழ்க்கையை ஒளியேற்றி வருகிறார்.

மேலும் கூடலூர் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. கூடலூர், நெல்லியாளம் நகராட்சிகள் ஓவேலி, தேவர் சோலை பேரூராட்சிகள் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் சாலை உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் ஏராளமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. பாக்கியுள்ள பணிகளும் விரைந்து நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை மூலம் நடைபெற்று வரும் சாலை பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

பின்னர் கூடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து அமைச்சர் கூறியதாவது: மாவட்ட தலைமை மருத்துவமனையாக நீலகிரி மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட கூடலூர் அரசு மருத்துவமனை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட காங்கயம் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. விரைவில் புதிய மருத்துவர்கள் இந்த மருத்துவமனைகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் கௌஷிக், கூடலூர் ஆர்டிஓ செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், சலீம், கூடலூர் நெல்லியாளம் நகராட்சி தலைவர்கள் பரிமளா, சிவகாமி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஓவேலி பேரூராட்சி தலைவர் சித்ராதேவி, கூடலூர் நகராட்சி ஆணையர் சுமிதா, கூடலூர் ஒன்றிய திமுக செயலாளர் லியாகத் அலி, நகர செயலாளர் இளஞ்செழியன் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கூடலூரில் கூட்டுறவு வார விழா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Cooperative Week ,Kudalur ,Minister ,M. P. Saminathan ,Gudalur ,Cooperative week festival ,71st All India Cooperative Week ,Nilgiri District Cooperative Union ,
× RELATED காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வார விழா...