×
Saravana Stores

செடி, கொடிகள், முட்புதர்கள் சூழ்ந்து வாகனங்களின் பார்க்கிங்காக மாறிய திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம்: பாம்புகள் வசிப்பிடமானதால் பொதுமக்கள் பீதி

திருத்தணி: திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம் உரிய பராமரிப்பின்றி செடி, கொடிகள் படர்ந்தும், முட்புதர்கள் வளர்ந்தும், பறிமுதல் செய்யப்பட்ட மணல் பல ஆண்டுகளாக குவித்து வைக்கப்பட்டுள்ளதாலும், வாகனங்கள் பார்க்கிங் பகுதியாக மாறியுள்ளது. திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் பட்டாபிராமபுரம் ஊராட்சியில் உள்ள ஏரி பகுதியில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் அனைத்து வசதிகளுடன் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் கட்டப்பட்டது.

இந்த அலுவலகம் கடந்த 2011ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது. இந்த அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் பொது, சமூக பாதுகாப்பு திட்டம், தேர்தல், வட்ட வழங்கல், நில அளவை, நகர நில அளவை, ஆதார், இசேவை மையம் உள்பட பல்வேறு பிரிவுகள் செயல்படுகிறது. வட்டாட்சியர் தலைமையில் தனி வட்டாட்சியர், தலைமையிடுத்து துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர்கள், சர்வேயர்கள் உள்பட 70க்கும் மேற்படோர் பணியாற்றி வருகின்றனர்.

திருத்தணி, திருவாலங்காடு ஆகிய ஒன்றியங்களை உள்ளடக்கிய திருத்தணி வட்டத்தில் 6 குறு வட்டங்கள், 87 வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்கு, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த அலுவலகத்தில் தரை தளம், முதல் தளம், மேல் தளம் என்று 3 பிரிவுகளாக அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, பட்டா, ஜாதி, வருவாய், வாரிசு சான்றுகள், நில அளவை, நகரி நில அளவீடு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் சேவை, இ-சேவை போன்ற பல்வேறு சேவைகளுக்காக பொதுமக்கள் தினமும் தாசில்தார் அலுவலகம் வந்து செல்கின்றனர்.

இந்த அலுவலகத்தை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டிய அலுவலக அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளாமல், பொறுப்பற்ற முறையில் செயல்படுவதால் அலுவலகம் கட்டிய 13 ஆண்டுகளில் பலவீனமடைந்து காணப்படுகிறது. மேலும், கட்டிடத்தை சுற்றி செடி, கொடிகள் மற்றும் முட்புதர்கள் அடர்த்தியாக வளர்ந்து அலுவலகத்தை ஆக்கிரமித்துள்ளது. விபத்து மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள், கார், வேன், டிராக்டர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை முட்செடிகள் சூழ்ந்து பயனற்று வீணாகியுள்ளது.

அலுவலக கூட்ட அரங்கில் உள்ள தரைதள டைஸ்ஸ் உடைந்து பல மாதங்கள் ஆகிறது. இதனால், அதில் நடந்து செல்வோர் தவறி விழுந்து காயமடைகின்றனர். மொட்டை மாடியில் மழைநீர் தேங்கி நிற்பதால், தளம் பலவீனமடைந்து மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.  தாசில்தார், அலுவலர்கள் வாகனங்கள் நிறுத்த அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங் பகுதி முழுவதும் அனுமதியின்றி வாகனங்களில் கடத்தப்பட்ட மணலை பறிமுதல் செய்து பல ஆண்டுகளாக குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இதனால், அலுவலகம் வரும் பொதுமக்கள் உள்பட மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர். வட்டாட்சியர் அலுவலகத்தை சுற்றி செடி, கொடிகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதால் பகல் நேரங்களிலும் விஷ பாம்புகள் சர்வ சாதாரணமாக அலுவலகத்தை சுற்றி திரிந்து வருவதால், பொதுமக்கள் பீதி அடைந்து வருகின்றனர். இதனால், வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே, வட்டாட்சியர் அலுவலகத்தை சுற்றி வளர்ந்துள்ள முட்புதர்கள், செடி, கொடிகளை அகற்றி, பல ஆண்டுகளாக அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் மலைப்போல் குவித்து வைத்துள்ள மணலை நீர்வளத்துறை அனுமதியுடன் அப்புறப்படுத்த வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அலுவலக தரையில் உடைந்துள்ள டைல்ஸை அகற்றி புதிய டைல்ஸ் பொருத்தி, கட்டிடத்தில் ஏற்படும் மழைநீர் கசிவை சீரமைக்கவும், வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இருக்கைகள், குடிநீர் உள்ளிட்ட குறைந்தபட்ச வசதிகள் செய்து தர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

The post செடி, கொடிகள், முட்புதர்கள் சூழ்ந்து வாகனங்களின் பார்க்கிங்காக மாறிய திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம்: பாம்புகள் வசிப்பிடமானதால் பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Thiruthani District Collector's ,Thiruthani ,Thiruthani District Collector's Office ,Tiruthani ,Chennai-Tirupati National Highway ,Pattabhiramapuram Panchayat ,Tiruthani District Collector's office ,
× RELATED திருத்தணி தொகுதி முகாம்களில்...