×

திருக்குறுங்குடியில் குளத்து மடையில் மண் அடைப்பால் நீர்வரத்து தடை: விவசாய பணிகள் தொடங்க முடியாமல் தவிப்பு

* நீர்வளத்துறை அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு

களக்காடு: திருக்குறுங்குடியில் குளத்து மடையில் மண் சரிந்து அடைப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாய பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடியில் படலையார்குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த குளத்திற்கு கொடுமுடியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. குளத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்ல இரண்டு மடைகளும் உள்ளன. இதில் செவிட்டு மடை கடந்த 1 ஆண்டுக்கு முன் சீரமைக்கப்பட்டது. சீரமைப்பு பணிகளின் போது, செவிட்டு மடையின் கரையில் மண் குவித்து வைக்கப்பட்டது. அதுபோல மடையின் அருகே இருந்த தடுப்புசுவரும் இடித்து அகற்றப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைதொடர்ந்து மடையில் அவ்வப்போது மண் சரிந்து விழுந்து வந்ததாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையினால் குளத்திற்கு சிறிதளவு தண்ணீர் வந்துள்ளது. ஆனால் செவிட்டு மடையில் மண் சரிந்து விழுந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மடையில் நீர் வருவது தடைபட்டுள்ளது. மடையில் தண்ணீர் வராததால் செவிட்டு மடை மூலம் பாசனம் பெறும் 10 ஏக்கர் விளைநிலங்களில் விவசாய பணிகளை தொடங்க முடியாத நிலை நிலவுகிறது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். மற்ற பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இப்பகுதியில் விவசாய பணிகளை தொடங்க முடியாத நிலை எழுந்துள்ளது. எனவே செவிட்டு மடையில் ஏற்பட்டுள்ள மண் அடைப்பை சீரமைக்க வேண்டும் என்றும், மடையில் மண் சரிவு ஏற்படாத வண்ணம் தடுப்பு சுவரும் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும் படையார் கூறுகையில், ‘மடையின் கரையில் மண்ணை குவித்து வைத்ததே இதற்கு காரணம் ஆகும். மண் குவியலை அகற்ற வேண்டும் என்றும், தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்றும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதையடுத்து மண் சரிவினால் மடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மடையில் தண்ணீர் வராமல் அடைத்துள்ளதால் விவசாய பணிகளை தொடங்குவதில் முட்டுகட்டை ஏற்பட்டுள்ளது” என்றார்.

The post திருக்குறுங்குடியில் குளத்து மடையில் மண் அடைப்பால் நீர்வரத்து தடை: விவசாய பணிகள் தொடங்க முடியாமல் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kulatu Mata ,Thirukurungudi ,Thirukurangudi ,PALAIARKULAM ,DISTRICT KALAKKADU ,
× RELATED திருக்குறுங்குடி அழகிய நம்பி ராயர் பெருமாள் ஆலயம்