×
Saravana Stores

கனடாவில் பதுங்கியிருந்த காலிஸ்தான் பிரிவினைவாதி மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு: நாடு கடத்த இந்தியா கோரிக்கை

புதுடெல்லி: கனடாவில் இருந்து செயல்பட்டு வரும் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தை சேர்ந்த ஹர்தீப்சிங் நிஜ்ஜாரின் நெருங்கிய கூட்டாளி அர்ஷ் தல்லா என்று அழைக்கப்படும் அர்ஷ் சிங் கில். இவர்தான் காலிஸ்தான் புலிப்படை தலைவராக உள்ளார். இந்தியாவில் தல்லா மீது கொலை, கொலை முயற்சி உள்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவருக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. 2023ல் இந்தியாவால் அவர் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். அர்ஷ் தல்லாவை கைது செய்யக்கூடிய கூடுதல் காரணங்களை அனுப்பி வைக்கும்படி கனடா நீதித்துறை இந்தியாவை கேட்டுக் கொண்டது. அந்த பட்டியல் 2024 ஜனவரி மாதம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கனடாவில் கடந்த மாதம் அக்டோபர் 28ம் தேதி அர்ஷ் தல்லாவும், அவரது கூட்டாளி குர்ஜந்த்சிங்கும் காரில் சென்று கொண்டு இருந்த போது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் அர்ஷ் தல்லா படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற கனடா போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவர்கள் சென்ற காரை சோதனையிட்ட போது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது அர்ஷ் தல்லா பதில் தாக்குதல் நடத்தியிருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக கனடா போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மேலும் தல்லா வீட்டில் சோதனை செய்த போது அங்கு இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தல்லாவையும், அவரது கூட்டாளியையும் போலீசார் கைது செய்தனர். தல்லாவும் , அவரது மனைவியும் கனடாவில் உள்ள சுரே பகுதியில் வசித்து வருவது தெரிய வந்துள்ளது.

கனடாவில் அர்ஷ் தல்லா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி கனடாவிடம் ஒன்றிய அரசு வலியுறுத்தி உள்ளதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

The post கனடாவில் பதுங்கியிருந்த காலிஸ்தான் பிரிவினைவாதி மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு: நாடு கடத்த இந்தியா கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Khalistan ,Canada ,India ,New Delhi ,Arsh Singh Gill ,Arsh Talla ,Hardeep Singh Nijjar ,Khalistan separatist ,Khalistan Tiger Force ,Tallah ,Dinakaran ,
× RELATED நிஜ்ஜார் கொலை குறித்து அவதூறுகளை...