சென்னை: இளநிலை பட்டப்படிப்பை முன்கூட்டியே அல்லது கல்வி காலத்தை அதிகரித்து முடிக்கும் வகையில் புதிய நடைமுறைக்கு யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் உயர்கல்வி நிறுவனங்களில் இந்த முறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ஐஐடியில் தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக தென்மண்டல அளவில் தன்னாட்சி கல்லூரிகளுக்கான ஒருநாள் கருத்தரங்கம் கடந்த நவம்பர் 2வது வாரம் நடைபெற்றது. இதில் யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் விரும்பினால் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் வகையில் புதிய நடைமுறைக்கு யுஜிசி ஒப்பதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தற்போது இந்த புதிய கல்வி முறைக்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 3 அல்லது 4 ஆண்டுகள் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் படிப்பை முன்னரே முடிக்க விரும்பினால் அதற்கான கிரெடிட் பெற்று முடிக்கலாம் எனவும், பட்டப்படிப்பின் காலத்தை அதிகரிக்க விரும்பினால் அதிகரித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த முறையில் படிக்கும் மாணவர்களின் பட்டப்படிப்பு, தற்போது நடைமுறையில் உள்ள பட்டப்படிப்பிற்கு நிகராக எடுத்துக் கொள்ளப்படும். மாணவர்கள் நிதிநிலை அல்லது தனிப்பட்ட காரணங்களினால் கல்லூரி படிப்பை முடிக்க முடியவில்லை என்றால் அவர்கள் கூடுதலாக 2 செமஸ்டர் வரை நேரம் எடுத்துக் கொண்டு முடிக்கலாம்.
The post இளநிலை பட்டப் படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய திட்டம்: நெறிமுறைகளை வெளியிட்டது யுஜிசி appeared first on Dinakaran.