புவனேஸ்வர்: அகில இந்திய 59வது டிஜிபிக்கள் மாநாடு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கடந்த 3 நாட்கள் நடைபெற்றது. விழாவில் நிறைவு நாளான நேற்று பிரதமர் மோடி மாநாட்டில் பங்கேற்று பேசியதாவது: நகர்ப்புறங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது உள்ளிட்ட காவல்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் பாராட்டும் வகையில் உள்ளன. உங்களின் ஒவ்வொரு முயற்சியையும் ஒருங்கிணைத்து, நாட்டின் 100 நகரங்களில் முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
காவலர்களின் பணிச்சுமையை குறைக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். ஸ்மார்ட் வசதிகளை பயன்படுத்தி காவல்துறையை மேலும் நம்பகமானதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மாற்ற வேண்டும். வளர்ச்சி அடைந்த இந்தியா என்கிற தொலைநோக்கு பார்வையுடன் காவல்துறை தன்னை நவீனப்படுத்தி மறுசீரமைக்க வேண்டும். உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்கள் குறித்து இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது டிஜிட்டல் மோசடிகள், சைபர் குற்றங்கள், ஏஐ தொழில்நுட்பம், குறிப்பாக சமூக மற்றும் குடும்ப உறவுகளை சீர்குலைக்கும் டீப்பேக் தொழில்நுட்பம் ஆகியவற்றின் காரணமாக ஏற்படும் அச்சுறுத்தல்கள் கவலை அளிக்கின்றன. இதை சமாளிக்க, இந்தியாவின் இரட்டை ஏஐ சக்திகளான செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆர்வமுள்ள இந்தியாவைப் பயன்படுத்தி சவாலை ஒரு வாய்ப்பாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இம்மாநாட்டில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post டிஜிபிக்கள் மாநாட்டில் டிஜிட்டல் மோசடி பற்றி பிரதமர் கவலை appeared first on Dinakaran.