×

சந்தன கூடு விழாவை முன்னிட்டு நாகூர் தர்கா பெரிய மினராவில் ஏற்றப்படும் சிங்கப்பூர் கொடி: 400 ஆண்டாக பெருமை சேர்ப்பு


நாகப்பட்டினம்: சந்தன கூடு விழாவை முன்னிட்டு நாகூர் ஆண்டவர் தர்கா பெரிய மினராவில் ஏற்றுவதற்காக கடந்த 400 ஆண்டுகளாக சிங்கப்பூரில் இருந்து கொடி வந்து பெருமை சேர்த்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கு இன்றுவரை எடுத்துகாட்டாக நாகூர் ஆண்டவர் கந்தூரி விழா நடைபெறுகிறது. 14 நாட்கள் நடைபெறும் கந்தூரி விழாவிற்கு வெளி மாநிலங்களை சேர்ந்த யாத்ரீகர்கள் மட்டும் இன்றி வெளிமாவட்டத்தை சேர்ந்த யாத்ரீகர்களும் வருகை தருகின்றனர். கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சியை காண கூட்டம், கூட்டமாக யாத்ரீகர்கள் வருகை தருவார்கள். சந்தனம் பூசும் நிகழ்ச்சிக்கு முன்பு நாகூர் தர்கா பெரிய மினரா, சாகிப் மினரா, தலைமாட்டு மினரா, முதுபக்மினரா, ஒட்டு மினரா ஆகிய மினராக்களில் கொடியேற்றப்படும்.

இந்த கொடியேற்றத்திற்கு கடந்த 400 ஆண்டு காலமாக சிங்கப்பூரில் இருந்து கொடி வருகிறது. சிங்கப்பூரில் வாழும் தமிழர்களுக்கு, நாகூர் ஆண்டவர் செய்த கருணையை போற்றும் வகையில் கந்தூரி விழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூரில் இருந்து கொடி அனுப்பி வைத்து நாகூர் ஆண்டவர் அருளாசியை பெற்று வருகின்றனர். நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து ரஜூலா என்ற பெயர் கொண்ட கப்பல் இயக்கப்பட்டபோது சிங்கப்பூரில் இருந்து நாகூர் ஆண்டவர் தர்கா விழாவிற்கு கொடி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொடி, நாகப்பட்டினத்தில் வைத்து மௌலூது ஷரீப் (பிரார்த்தனை) செய்யப்படும். இதன் பின்னர் அந்த கொடி, ஊர்வலத்தின் போது நாகப்பட்டினம் நகரின் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அதன் பின்னர் நாகூர் பெரிய மினராவில் ஏற்றப்படும். இந்த நடைமுறை இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் கப்பல் நிறுத்தப்பட்ட பின்னர் சிங்கப்பூர் கொடி, சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் இலங்கை வந்தடையும். பின்னர் அங்கு மௌலூது ஷரீப் (பிரார்த்தனை) செய்த பின்னர் அங்கிருந்து விமானத்தில் திருச்சி வரும். பின்னர் அங்கிருந்து நாகப்பட்டினம் கொண்டு வரப்படும். தொடர்ந்து செம்மரக்கடை தெரு தென் சந்து பகுதியில் மர்ஹூத் ஹாஜி வாப்புக்கண்டு மரைக்காயர் இல்லத்தில் வைத்து மௌலூது ஷரீப் ( பிரார்த்தனை) செய்யப்படும். 20 நாட்களுக்கும் மேலாக மரைக்காயர் இல்லத்தில் மௌலூது ஷரீப் (பிரார்த்தனை) செய்யப்படும். இதன்படி இந்த வருடம் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் இலங்கை வந்தடைந்த சிங்கப்பூர் கொடி, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் கடந்த 10ம் தேதி திருச்சி வந்தது.

பின்னர் அங்கிருந்து காரில் நாகப்பட்டினம் கொண்டு வரப்பட்டு தொடர்ந்து பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது. டிச.2ம்தேதி கொடி ஊர்வலத்தின் போது இந்த சிங்கப்பூர் கொடி நாகப்பட்டினம் நகர பகுதியில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நாகூர் தர்கா பெரிய மினராவில் ஏற்றப்படும். 400 ஆண்டுகாலமாக சிங்கப்பூர் கொடி நாகப்பட்டினத்திற்கு வருகை தந்து நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவிற்கு பெருமை சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post சந்தன கூடு விழாவை முன்னிட்டு நாகூர் தர்கா பெரிய மினராவில் ஏற்றப்படும் சிங்கப்பூர் கொடி: 400 ஆண்டாக பெருமை சேர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Singapore ,Nagore Targa Great Minara ,Sandalwood Nest Festival ,Nagapattinam ,Nagore Lord Targa ,Nagore ,Lord ,Targa ,Great Minara ,Nagore Targa ,Dinakaran ,
× RELATED கடல் கடந்த காதல்: மியான்மர் நாட்டு பெண்ணை மணந்த தமிழக வாலிபர்