×
Saravana Stores

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில் காய்ச்சல், தொற்றுநோயை தடுக்க நடமாடும் மருத்துவ முகாம்: வீடுவீடாகச் சென்று பொதுமக்களுக்கு பரிசோதனை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி காட்டுகொள்ளை பகுதியில் காய்ச்சல், தொற்றுநோயை தடுக்க நடமாடும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடுவீடாகச் சென்று பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சி காட்டுகொள்ளை திருவள்ளூர் நகர் பகுதியில் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு பல தெருக்களில் கால்வாய் வழியாக குடியிருப்பு கழிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் அந்தப் பகுதியையொட்டி சுமார் 10 ஏக்கருக்கு மேல் தாமரை ஏரி உள்ளது. இந்த தாமரை ஏரிக்கு பல பகுதிகளில் இருந்து மழைநீர் ஒன்றிணைந்து வருவது வழக்கம். மழைக்காலங்களில் கால்வாய் வழியாக பல்வேறு விவசாய பகுதிகளுக்கு இங்கிருந்து தண்ணீர் செல்வது வழக்கம்.

இந்தநிலையில் திருவள்ளூர் காட்டுக்கொள்ளை பகுதியில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் அலர்ஜி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தொடர்ந்து பரவி வருகிறது. இது சம்பந்தமாக பேரூராட்சி நிர்வாகம் கணக்கீடு செய்து குடியிருப்புவாசிகளுக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து வருகிறது. இந்தநிலையில் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களில் காட்டுக்கொள்ளை பகுதியில் அதிகளவு காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் இருப்பதாக செய்தி பரவியது.

இதனை அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் ஒன்றிணைந்து வீடுவீடாகச் சென்று காய்ச்சல் உள்ளவர்களை மருத்துவ பரிசோதனை செய்து கால்வாய்களில் பேரூராட்சி சார்பாக கொசு மருந்து அடிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நடமாடும் மருத்துவ முகாம் திருவள்ளூர் நகரில் அமைத்து தாய்மார்கள், இளைஞர்கள் மற்றும் முதியோர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு சிலருக்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தவுடன் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, என்ன வகை காய்ச்சல் இருக்கிறது என மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர்.

இது சம்பந்தமாக மாசு கட்டுப்பட்டு வாரிய அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கழிவுநீரை தடுப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாகும். எனவே உடனடியாக திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும், தாமரை ஏரியை சுத்தம் செய்ய வேண்டும் எனவும், கழிவுநீரை விடுபவர்கள் மீது போக்குவரத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

* டெங்கு, மலேரியா பாதிப்பு
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்தப் பகுதியையொட்டி உள்ள தாமரை ஏரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. அங்குள்ள பல்வேறு ரசாயன கழிவுகள் மற்றும் கும்மிடிப்பூண்டி, பெத்திகுப்பம், தேர்வழி, ஆத்துப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து மனிதக் கழிவுகள் வாகனங்கள் மூலம் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கால்வாய்களில் தொடர்ந்து விடப்படுகிறது. அப்படி விடப்படும் கழிவுநீரானது கால்வாய் வழியாக தாமரை ஏரி பகுதிக்கு ஒரு நாளைக்கு பல லிட்டர் கணக்கில் வந்து செல்வதால் கொசுக்கள் உருவாகி டெங்கு, மலேரியா காய்ச்சல் வருவதற்கு காரணமாக அமைகிறது.

The post கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில் காய்ச்சல், தொற்றுநோயை தடுக்க நடமாடும் மருத்துவ முகாம்: வீடுவீடாகச் சென்று பொதுமக்களுக்கு பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi Municipality ,Kummidipoondi ,Kattkollai Tiruvallur Nagar ,Gummidipoondi ,medical camp ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பரபரப்பு; டேங்கர் லாரியில் கேஸ் கசிவு