திருவள்ளூர்: ஆண்களும் குடும்ப நலத்தில் பங்கேற்கும் பொருட்டு ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்கள் நடத்த தமிழக அரசால் இரு வார விழிப்புணர்வு விழா ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் தங்க தந்தை திட்டத்தின் மூலம் ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுவதை முன்னிட்டு நவீன வாசக்டமி விழிப்புணர்வு ரத யாத்திரை நடைபெற்றது. கலெக்டர் த.பிரபுசங்கர் விழிப்புணர்வு ரதத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு குடும்ப நலத்துறையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு குடும்ப நல ஆண் கருத்தடை முகாம்கள் நடத்திட மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறையின் சிறப்பு அம்சங்கள் பெண்களுக்கான குடும்ப நல்ல கருத்தடை செய்வதைவிட எளிமையானது. மயக்க மருந்து கொடுப்பதில்லை. கத்தியின்றி ரத்தம் இன்றி செய்யப்படுகிறது. தையல் இல்லாததால் தழும்பு தெரியாது. மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.
சிகிச்சை முடிந்தவுடன் வீட்டிற்கு செல்லலாம். 2 மணி நேரத்திற்கு பின்னர் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம். இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டு குடும்ப நல கருத்துடைமுறை ஏற்கும் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ஈட்டு தொகையாக ரூ.1100 வழங்கப்படும். இந்த சிறப்பு முகாமில் குடும்ப நலம் ஏற்கும் ஆண்களுக்கு கலெக்டர் வழங்கும் ஊக்கத்தொகை ரூ.3900 சேர்த்து ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். மேலும் ஊக்குவிப்பாளருக்கு ரூ.200 வழங்கப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் மீரா, குடும்ப நல துணை இயக்குனர்கள் சேகர், கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post குடும்பநல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு யாத்திரை: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.