×

விஐடியின் 40வது ஆண்டு மாணிக்க விழா கல்வி, சுகாதாரம், வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: முன்னாள் குடியரசு துணைத்தலைவர் பேச்சு

சென்னை: கல்வி, சுகாதாரம், வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று விஐடியின் 40வது ஆண்டு மாணிக்க விழா, புதிய மாணவியர், ஊழியர்கள் குடியிருப்பு திறப்பு விழாவில் முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பேசினார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் 40வது ஆண்டு மாணிக்க விழா மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள (ராஜம்மாள் கோவிந்தசாமி) ஊழியர் குடியிருப்பு, சரோஜினி நாயுடு பிளாக் (மாணவியர் விடுதி) கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்தார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கதிர்ஆனந்த் எம்பி, விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், நிர்வாக இயக்குநர் சந்தியா பெண்டாரெட்டி, உதவி துணைத்தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், ரமணி சங்கர், துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு மாணிக்க விழா, புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசியதாவது: வேலூர், சென்னை, ஆந்திரா, மத்திய பிரதேச மாநில வளாகங்கள் மூலம் ஒரு லட்சம் மாணவர்கள் பயிலும் விஐடி பல்கலைக்கழகத்தின் அடுத்த வளாகத்தை டெல்லியில் தொடங்கிட வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தியாவில் 27 சதவீதம் பேருக்கு உயர்கல்வி கிடைக்கிறது. இந்தியாவில் 18 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். அவர்களுக்கும், கிராமத்தில் உள்ளவர்களுக்கும் அடிப்படைக் கல்வி, மருத்துவம் போன்ற சேவைகள் கிடைப்பதில் இடைவெளி உள்ளது. அவர்களுக்கு கல்வி, சுகாதாரத்தை இலவசமாக வழங்க வேண்டும். நாட்டில் 56 சதவீதம் மக்கள் வேளாண்மை சார்ந்துள்ளனர். எனவே, அரசு வேளாண் துறையின் சிக்கலை தீர்க்கவும், கல்வி, சுகாதாரம், வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது: வளர்ச்சியின் பலன் எல்லோரையும் சேரவும் அனைவருக்கும் உயர் கல்வி அவசியமாகும். அதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் கல்விக்கு கூடுதலாக செலவழிக்க வேண்டும். அப்போதுதான் நாடு வளரவும், ஏழ்மையை குறைக்கவும் முடியும். தவிர, கல்வி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் சலுகை அளிக்கவும், உரிமங்கள் வழங்குவதை எளிமைப்படுத்திட வேண்டியதும் அவசியம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி செல்வராஜ், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விழாவில் எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா, முன்னாள் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விஐடியின் 40வது ஆண்டு மாணிக்க விழா கல்வி, சுகாதாரம், வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: முன்னாள் குடியரசு துணைத்தலைவர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : VIT ,Former Vice President ,CHENNAI ,Venkaiah Naidu ,Vellore VIT University ,Dinakaran ,
× RELATED க்யூ.எஸ் அமைப்பின் நிலையான தன்மை...