செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் போனஸ்சாக வழங்கிய தொகையை சம்பளத்தில் பிடித்தம் செய்ததை கண்டித்து தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கிரிஸ்டல் என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் தூய்மைப்பணி, ஹவுஸ்கீப்பிங், நோயாளிகளை ஸ்ட்ரெச்சரில் வைத்து அழைத்து செல்வது, பாதுகாவலர் பணி என அனைத்து பணிகளுக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் என 500க்கும் மேற்ப்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் சுழற்சி முறையில் 24மணி நேரமும் மூன்று ஷிப்ட்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.
இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் தரப்பில் கூறுகையில், எங்களுக்கு மாதம் ரூ.8ஆயிரம் முதல் ரூ.15ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு மாதம் 10ம் தேதி ஊதியம் வழங்குவதாக உத்திரவாதம் அளித்து மாதாமாதம் உரிய தேதியில் ஊதியம் வழங்கியதில்லை. அதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அதே நிலைதான் நீடிக்கிறது. இந்நிலையில் இந்த தீபாவளிக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு அனைத்து பணியாளர்களுக்கும் தலா ரூ.5ஆயிரம் வழங்கப்பட்டது.
இது எதற்காக வழங்கப்பட்டது என்பதையும் கிரிஸ்டல் நிர்வாகம் தெரிவிக்கவில்லை. தீபாவளிக்கு போனஸ் பணம் வழங்கப்பட்டதாக ஊழியர்கள் மகிழ்ச்சியில் இருந்தோம். இந்நிலையில், 10ம்தேதி மாத சம்பளம் வழங்கும்போது ஊழியர்கள் அனைவருக்கும் தீபாவளிக்கு வழங்கிய ரூ.5 ஆயிரம் பிடித்தம் போக மீதி சம்பளத்தை வழங்கியுள்ளது தெரிய வந்தது. எதையும் தெளிவாக சொல்லாமல் கிரிஸ்டல் நிர்வாகமே ரூ.5ஆயிரம் வழங்கிவிட்டு அந்த பணத்தை சம்பள தொகையில் மொத்தமாக பிடித்தம் செய்கிறார்கள்.
மாதம் ரூ.500அல்லது ரூ.1000 பிடித்தம் செய்தாலும் பரவாயில்லை. மொத்தமாக பிடித்ததை கண்டித்து 300க்கும் மேற்ப்பட்டோர் பணியை புறக்கணிப்பு செய்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். அதுமட்டுமின்றி மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு கையுறை உள்ளிட்ட எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில்லை. இதுகுறித்து கேட்டால் நீங்க செய்யற வேலைக்கு பாதுகாப்பு உபகரணங்கள் தேவையா என அலட்சியமாகவும், கேவலமாகவும் கிரிஸ்டல் நிர்வாகம் பதிவளிக்கிறது என குற்றம்சாட்டி கூறினர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் சமரசம் பேசி கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், சுமார் காலை 7 மணி அளவில் தொடங்கிய இந்த போராட்டம் 11 மணிக்கு முடிவுக்கு வந்தது. இருப்பினும், இந்த போராட்டத்தால் மருத்துவமனையில் தூய்மை பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது.
The post போனசாக வழங்கிய பணத்தை சம்பளத்தில் பிடித்ததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.