×
Saravana Stores

அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள கொடுமுடி அரசு போக்குவரத்து பணிமனை தரம் உயர்த்தப்படுமா?

கொடுமுடி, நவ. 10: ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் அடிப்படை வசதிகள் போதிய அளவு இல்லாத அரசு போக்குவரத்து கழக பணிமனையை தரம் உயர்த்தி கொடுக்க வேண்டும் என டிரைவர், நடத்துநர்கள் மற்றும் கொடுமுடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொங்கு ஏழு ஸ்தலங்களில் ஒன்றாகவும், சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகள் ஸ்தலமாக பிரசித்தி பெற்று காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கொடுமுடிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

கொடுமுடியிலிருந்து கோவை, சேலம், திருச்சி, திண்டுக்கல், பழநி உள்ளிட்ட ஊர்கள் சுமார் 110 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளன. ஈரோட்டிலிருந்து கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமேஸ்வரம், மதுரை, அருப்புக்கோட்டை, சிவகாசி, சிவகங்கை, கம்பம், குமுளி, திருச்செந்தூர், ராஜபாளையம், நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கு நேரடியாக இயக்கப்படும் தொலை தூர பஸ்கள் கொடுமுடி வழியாக சென்று வருகின்றன.

இந்நிலையில், பொதுமக்கள், உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழு மற்றும் சமூக நல ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டம் சார்பில் ஈரோடு மண்டல அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் நிலத்தில் கடந்த 2014ம் ஆண்டு கொடுமுடியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை துவங்கப்பட்டது.

அன்று 21 பஸ்களுடன் துவங்கப்பட்ட பணிமனை இன்று வரை அதே 21 பஸ்களுடன் இயங்கி வருகிறது. இதில், 15 நகர பஸ்கள் மற்றும் 6 புறநகர் பஸ்கள் உள்ளன. சுமார் 100 பேர் பணிபுரியும் பணிமனையில் கடந்த 10 ஆண்டுகளாக தேவையான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. பணிமனைக்கு கேன்டீன் வசதி, கான்கிரீட் தரை தளம், ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் ஓய்வு அறை, கழிவறைகள் மற்றும் குளியலறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவு செய்யப்படவில்லை. மேலும், பணிமனையில் உயர் கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்தவில்லை. ஊழியர்களின் வாகனங்கள் நிறுத்த போதுமான வசதி இல்லை.

மேலும், பணிமனைக்கு காம்பவுண்ட் சுவர் இல்லாததால் அருகில் உள்ள காடுகளில் இருந்து தேள், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் பணிமனைக்குள் வருகிறது. இதே காலகட்டத்தில் துவக்கப்பட்ட அன்னூர் மற்றும் அரவக்குறிச்சி பணிமனைகள் 10 ஆண்டுகளில் அபரிதமான வளர்ச்சி பெற்று சுமார் 90க்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்கி வருகின்றன.
ஆனால், கொடுமுடியில் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவே இல்லை. ஏற்கனவே, இயங்கி வந்த கொடுமுடி கிளை கே-9, காங்கயம் கிளை கே-3, வி-1, ஈரோடு- 3 கிளையை சேர்ந்த ஈரோடு-காட்டுபுத்தூர் (கொடுமுடி வழி) பஸ், காங்கயம் கிளையை சார்ந்த கொடுமுடி ஒட்டன்சத்திரம் பஸ், திருப்பூர் மண்டல கொடுமுடி-காங்கயம் மற்றும் திருப்பூர் பஸ்கள், சேலம் கோட்ட பஸ்கள் சேலம்-பழநி, திருச்செங்கோடு-கொடுமுடி, ஆத்தூர்-பழநி உள்ளிட்டவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், திண்டுக்கல் மண்டலம் சார்பில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்த ஒட்டன் சத்திரம்-கொடுமுடி, பழநி-கொடுமுடி பஸ்கள், அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்த கோவை கோட்டம் பழநி-கொடுமுடி மற்றும் கும்பகோணம் கோட்டம் சார்பில் கொடுமுடி-பள்ளபட்டி, அரவக்குறிச்சி உள்ளிட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால், கொடுமுடி மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள், பக்தர்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் நோயாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கரூர், ஈரோடு சென்று பல்வேறு ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள சிரமமான சூழல் உள்ளது. இதனால், இவர்களுக்கு நேரம் மற்றும் பண விரயம் ஏற்படுவதுடன், மன உளைச்சலும் ஏற்படுகிறது.

இதுகுறித்து கொடுமுடி உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழுவின் செயலாளர் ராஜசுப்ரமணியன் கூறுகையில், ‘‘கொடுமுடியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையினை தரம் உயர்த்தி கொடுக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இது குறித்து கொடுமுடி கிளையில் பணிபுரிந்த கிளை மேலாளர்கள், ஈரோடு மண்டல போது மேலாளர்கள் மற்றும் கோவையில் உள்ள நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்டோர் முழு முயற்சி மேற்கொண்டிருந்தால் எங்கள் கோரிக்கை நிறைவேறியிருக்கும். இதனால், சிதிலமடைந்த நிலையில் உள்ள பஸ்களில் பயணம் செய்ய வேண்டிய பரிதாப நிலையில் பயணிகள் உள்ளனர். கொடுமுடியிலிருந்து சேலம், குன்னத்தூர், உடுமலை, மதுரை உள்ளிட்ட பல்வேறு புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.

மேலும், நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்பட வேண்டும். மற்ற பணிமனைகளில் இருந்து கொடுமுடிக்கு பஸ்கள் மாற்றப்பட வேண்டும். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகளை ஒருங்கிணைத்து முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்ப உள்ளோம்’’ என்றார்.

The post அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள கொடுமுடி அரசு போக்குவரத்து பணிமனை தரம் உயர்த்தப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Kodumudi Government Transport Workshop ,Kodumudi ,State Transport Corporation ,Erode district ,Kongu Seven ,Dinakaran ,
× RELATED சென்னையில் இருந்து சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்