ஈரோடு, நவ.19: ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலை பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் இருவருக்கு பிறப்புச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா, கடம்பூர் அருகே உள்ள ஏரியூரை சேர்ந்தவர் கணேசன். கூலி தொழிலாளி. இவர் சில ஆண்டுக்கு முன்னர் இறந்துவிட்டார். இவரது மனைவி ரங்கம்மாள். இவர்களுக்கு ராஜாமணி (11), ராஜம்மாள் (11) என இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
கணவர் இறந்த பின் ரங்கம்மாள் வேறு இடத்தில் வசிப்பதுடன், எப்போதாவது வந்து குழந்தைகளை பார்த்து செல்வாராம். அந்த குழந்தைகள், அவர்களது பாட்டியின் வீட்டில் வளர்ந்து வருகின்றனர். அவர்கள், கடம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகின்றனர். இரு குழந்தைகளும் மருத்துவமனையில் பிறக்காமல், வீட்டில் பிறந்துள்ளனர். தவிர தந்தை இறப்பு, தாயார் வேறு இடத்துக்கு சென்றது போன்ற காரணத்தால், அந்தக் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் முறையாக பெறவில்லை.
குழந்தை பிறப்பின்போது கொடுக்கப்பட்ட சில ஆவணங்களும் தொலைந்து விட்ட நிலையில், அக்குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதிலும், ஆதார் அட்டை பெறவும், பள்ளி கல்வித்துறையின் ‘எமிஸ்’ பதிவு போன்ற பணிகளையும் மேற்கொள்ள இயலவில்லை.
இந்நிலையில், பரன் என்ற தொண்டு நிறுவனத்தினர் அக்குழந்தைகளை அழைத்து வந்து பிறப்புச்சான்றிதழ் வழங்க கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அக்குழந்தைகளுக்கு பிறப்புச்சான்றிதழ் வழங்கினால் மட்டுமே அவர்களால் கல்வியை தொடர முடியும் எனும் நிலை உள்ளதால், உரிய துறையினர் விசாரிக்குமாறு அதிகாரிகள் மனுவை அனுப்பி வைத்தனர்.
The post பழங்குடியின குழந்தைகளுக்கு பிறப்புச்சான்றிதழ் வழங்க கோரி மனு appeared first on Dinakaran.