×

வாட்ஸ்அப் கால் மூலம் இரவு நேரங்களில் சர்வதேச பிரபல பெண் விளையாட்டு வீராங்கனைக்கு செக்ஸ் டார்ச்சர்: பெங்களூரு வாலிபர் கைது

சென்னை: பெண் விளையாட்டு வீராங்கனை போல் ஆள்மாறாட்டம் மூலம் இரவு நேரங்களில் வாட்ஸ் அப் மூலம் சர்வதேச பிரபல பெண் வீராங்கனைக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்த பெங்களூரு வாலிபரை மாநில சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். சென்னை அசோக் நகரில் உள்ள தமிழ்நாடு சைபர் க்ரைம் தலைமை அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 21ம் தேதி சர்வதேச பிரபல பெண் விளையாட்டு வீராங்கனை ஒருவர் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், நான் சர்வதேச விளையாட்டு வீராங்கனையாக உள்ளேன்.

எனது வாட்ஸ் அப் எண்ணுக்கு, என்னை போல் பிரபலமான பெண் விளையாட்டு வீராங்கனை ஒருவரின் புகைப்படத்துடன் ஒரு வாட்ஸ் அப் எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தது. நள்ளிரவு நேரத்தில் வாட்ஸ் அப் கால் மூலம் தொடர்பு கொண்டு ஆண் ஒருவர் அருவருக்கத்தக்க வார்த்தைகளை கூறி தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார். இதனால் நான் அந்த வாட்ஸ் அப் எண்ணை தடை செய்துவிட்டேன். ஆனால் அந்த நபர், மீண்டும் புதிய எண்களில் வேறு வீராங்கனையின் புகைப்படத்துடன் தொடர்ந்து இரவு நேரங்களில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்து வருகிறார்.

எனவே பெண் வீராங்கனை ஒருவரின் புகைப்படத்தை வாட்ஸ் அப் டிபியாக வைத்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வரும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். அந்த புகாரின் படி தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீசார் வீராங்கனையை தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக பேசி தொந்தரவு செய்து வந்த நபரின் வாட்ஸ் அப் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது, கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சாசிலி சிவா தேஜா (30) என்ற வாலிபர் விளையாட்டு வீராங்கனையை இரவு நேரங்களில் தொடர்பு கொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து மாநில சைபர் க்ரைம் போலீசார் பெங்களூரு சென்று விளையாட்டு வீராங்கனையிடம் பல்வேறு விளையாட்டு வீராங்கனைகளின் புகைப்படங்களை வாட்ஸ் அப் டிபியாக வைத்து ஆள்மாறாட்டம் மூலம் தொந்தரவு செய்து வந்த சாசிலி சிவா தேஜா என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சென்னைக்கு அழைத்து வந்த இதுபோல் வேறு யாரேனும் விளையாட்டு வீராங்கனைகளை தொந்தரவு செய்து மோசடியில் ஈடுபட்டள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post வாட்ஸ்அப் கால் மூலம் இரவு நேரங்களில் சர்வதேச பிரபல பெண் விளையாட்டு வீராங்கனைக்கு செக்ஸ் டார்ச்சர்: பெங்களூரு வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : BANGALORE ,Chennai ,Ashok ,WhatsApp ,
× RELATED புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக...