- நெல்லை ஜல் நீட் பயிற்சி மையம்
- மனித உரிமைகள் ஆணையம்
- நெல்லை
- ஜல் நீட்
- மாநில மனித உரிமைகள் ஆணையம்
- நெல்லை ஜல் நீட் பயிற்சி மையம்
- மாநகராட்சி
- தின மலர்
நெல்லை: நெல்லையில் ஜல் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டது தொடர்பாக எடுத்த நடவடிக்கை என்ன? என விளக்கம் கேட்டு மாநில மனித உரிமைகள் ஆணையம் கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நெல்லை, புதிய பேருந்து நிலையம் அருகே கேரளாவைச் சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் ஜல் நீட் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்த பயிற்சி மையத்தில் வார்டனாக பணி புரிந்த அமீர் உசேன் என்பவர் கடந்த அக்.1ம் தேதி, நீட் பயிற்சி மைய மாணவர்கள் அடித்து கொடுமைப்படுத்தப்படுவதாக மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதற்கான வீடியோ ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.
இதற்கிடையே நீட் பயிற்சி மைய உரிமையாளர் மாணவர்களை பிரம்பால் தாக்கி விரட்டுவதும், மாணவி ஒருவர் மீது செருப்பை தூக்கி வீசி எறியும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலானது. இது மனித உரிமை ஆணைய மனுக்கள் குறித்த விசாரணைக்காக நெல்லையில் முகாமிட்டிருந்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து கடந்த மாதம் 18ம் தேதி நீட் பயிற்சி மையத்திற்கு நேரடியாக சென்று, அங்கு மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் நீட் பயிற்சி மைய உரிமையாளர் ஜலாலுதீன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்குதல் தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டு நெல்லை கலெக்டர், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர், நெல்லை மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீட் பயிற்சி மையத்தில் விடுதி செயல்பட்டு வந்துள்ளது. அதற்கு அனுமதி பெறப்பட்டதா, அங்கு மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினரா என்பதன் அடிப்படையில் இந்த வழக்கில் மாநகராட்சி கமிஷனரும் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்கள் மூவரும் 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
The post நெல்லை ஜல் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது தாக்குதல்; கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ்: 6 வாரத்தில் அறிக்கை தர மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.