சென்னை : சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவால் மாணவிகள் மயக்கம் அடைந்த தனியார் பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்று மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர். திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 25ம் தேதி 40க்கும் மேற்பட்ட மாணவிகள் திடீரென மயக்கம் அடைந்தனர். வாயு கசிவு காரணமாக மாணவிகள் மயக்கம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், 10 நாள் விடுமுறைக்கு பிறகு பள்ளி நேற்று திறக்கப்பட்டது.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் எப்படி பள்ளியை திறந்தீர்கள் என்று பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென 2 மாணவிகளுக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்டது. காரணம் குறித்து ஆய்வு செய்வதற்குள் அடுத்தடுத்து 6 மாணவிகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புத் துறை, காவல்துறை, வருவாய் துறை, மாநகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. பின்னர் வாயுக் கசிவு குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நடமாடும் இயந்திரம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், காற்றின் தரம் குறித்து பள்ளியில் 2வது நாளாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 3 நாட்கள் பள்ளியில் முகாமிட்டு இரவு பகலாக ஆய்வு நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
The post திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவால் மாணவிகள் மீண்டும் மயக்கம் : மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் 2வது நாளாக ஆய்வு!! appeared first on Dinakaran.