சென்னை: மகளிர் இலவச பயணத்திற்கு வசதியாக, கூடுதலாக 700 டீலக்ஸ் பேருந்துகள் பிங்க் நிறத்திற்கு மாற்றப்பட உள்ளதாக, எம்டிசி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில், பல்வேறு வழித்தடங்களில் 3,376 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் சராசரியாக ஒவ்வொரு நாளும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். முக்கிய வழித்தடங்களில் பீக் ஹவர்களில் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது.
படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இருப்பினும் பேருந்துகளின் தேவை அதிகமாக உள்ளது. தற்போது சாதாரண பேருந்துகள், மினி பேருந்துகள், டீலக்ஸ், ஏசி பேருந்துகள் என பல்வேறு வகையான பேருந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பிங்க் நிற பேருந்துகள் என்பது விடியல் பயண திட்டத்தின் கீழ் மகளிர் இலவசமாக பயணம் செய்ய இயக்கப்படுகின்றன. இது சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மகளிருக்கு பெரிதும் பயனுள்ள சேவையாக மாறியிருக்கிறது.
இலவச பேருந்து திட்டம் மூலம் குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு அதிகம் பயன் தருவதாகவும் இதனால் மாதந்தோறும் ரூ.541 முதல் ரூ.1,283 வரை சேமித்து, அதனை வைத்து அவர்கள் விலையேற்றத்தை சமாளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் பணிக்கு செல்வது அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தை பயன்படுத்துவோரில் 60% பேர் 40 வயதுக்கு குறைவானவர்கள் என்றும் 80% பேர் எஸ்.சி. மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இலவச பயணத்தை வழங்கும் பேருந்துகளை அடையாளப்படுத்தும் வகையில் பேருந்துகள் பிங்க் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. சில பேருந்துகளுக்கு முன் பக்கமும், பின் பக்கமும் மட்டும் பிங்க் நிறம் பூசப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் பலவும் மிகவும் பழைய பேருந்துகளாக மாறிவிட்டன. இவற்றை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக அறிமுகம் செய்யப்படும் பி.எஸ்.வி.ஐ பேருந்துகள் பிங்க் நிற சேவையாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தேவை என்பது அதிகமாக காணப்படுகிறது. அடுத்த பேட்ச் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் பல வாரங்கள் ஆகும் என்கின்றனர். எனவே தற்போதைய நிலைமையை சமாளிக்க சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் முக்கியமான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, அதிக கட்டணத்துடன் இயங்கி வரும் சிவப்பு நிற டீலக்ஸ் பேருந்துகள் சிலவற்றை தேர்வு செய்து, அவற்றுக்கு பிங்க் நிறம் பூச திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாநகரின் 30 பணிமனைகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருந்த 700 சிவப்பு நிற பேருந்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டம் மகளிருக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
The post பீக் ஹவர்சில் கூட்ட நெரிசலை தவிர்க்க மகளிர் இலவச பயணத்திற்காக கூடுதலாக 700 டீலக்ஸ் பஸ்கள்: மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு appeared first on Dinakaran.