×

கண்டாச்சிபுரம் அருகே நள்ளிரவில் பரபரப்பு; குட்கா கடத்தலை தடுக்க முயன்ற எஸ்ஐயை கார் ஏற்றி கொல்ல முயற்சி: வனப்பகுதிக்கு தப்பிய குற்றவாளிக்கு வலை

கண்டாச்சிபுரம்: விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரத்திற்கு காரில் மூட்டை மூட்டையாக குட்கா கடத்தி வருவதாக மது மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிறப்பு படை உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் கண்டாச்சிபுரம் உதவி ஆய்வாளர் காத்தமுத்து, தனிபிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் கண்டாச்சிபுரம் போலீசார் அனைவரும் மாவட்ட எல்லையான மழவந்தாங்கல் கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருவண்ணாமலையிலிருந்து அதிவேகமாகவும், சந்தேகப்படும் வகையிலும் வந்த காரை வழிமறித்தனர். அப்போது அந்த கார் எஸ்ஐ சண்முகம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அப்போது அங்கிருந்த கண்டாச்சிபுரம் உதவி ஆய்வாளர் காத்தமுத்து, தனிபிரிவு எஸ்ஐ சரவணன் மற்றும் போலீசார் அந்த காரை இருசக்கர வாகனத்தில் சேசிங் செய்து தடுத்து நிறுத்த முற்பட்டனர். இதனால் அந்த கார் மேலும் அதிவேகமாக சென்றுள்ளது. தொடர்ந்து காரை போலீசார் பின்தொடர்ந்ததை பார்த்த காரில் இருந்த குற்றவாளி காரை அடுக்கம் துறிஞ்சிகாடு பகுதியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

பின்னர் போலீசார் கார் மற்றும் காரில் இருந்த சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 405 கிலோ எடையுள்ள 41 மூட்டை குட்கா பொருளை பறிமுதல் செய்து வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கார் மோதியதில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட எஸ்ஐ சண்முகம் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தப்பியோடிய குற்றவாளியை கண்டாச்சிபுரம் போலீசார் அடுக்கம், மழவந்தாங்கல் வனப்பகுதியில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குற்றவாளி குறித்து ரகசிய துப்பு கிடைத்துள்ள நிலையில் இன்று இரவுக்குள் குற்றவாளியை கைது செய்ய வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு நாமக்கல்லில் ஏடிஎம் கொள்ளையர்களை போலீசார் கார்களில் சேசிங் செய்து மடக்கிப்பிடித்த சம்பவம் போல் கண்டாச்சிபுரம் அருகே காரில் குட்கா கடத்திய நபரை பைக்கில் போலீசார் விரட்டிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கண்டாச்சிபுரம் அருகே நள்ளிரவில் பரபரப்பு; குட்கா கடத்தலை தடுக்க முயன்ற எஸ்ஐயை கார் ஏற்றி கொல்ல முயற்சி: வனப்பகுதிக்கு தப்பிய குற்றவாளிக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Kandachipuram ,SI ,Gutka ,Tamil Nadu government ,Ananthapuram ,Viluppuram district ,Kudka ,Tiruvannamalai ,Viluppuram ,
× RELATED மளிகை கடையில் குட்கா விற்றவர் கைது