×

சிறையில் உள்ள ஞானசேகரனின் செல்போன் வாட்ஸ்அப் விவரங்கள் சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு: ஆபாச வீடியோவை யாருக்காவது பகிர்ந்தாரா; பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று விசாரணை

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஞானசேகரனின் செல்போனை கைப்பற்றி சம்பவத்தன்று எடுக்கப்பட்ட வீடியோ யாருக்காவது பகிர்ந்தாரா என்பது குறித்து நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது. சென்னை அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 24ம் தேதி இரவு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில், கோட்டூப்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் (37) என்ற பிரியாணி கடைக்காரரை உடனே கைது செய்து, போலீசார் அவனை சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கை விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட் உத்தரவின்பேரில் அண்ணாநகர் துணை கமிஷனர் சினேகா பிரியா, ஆவடி துணை கமிஷனர் ஐமன் ஜமால், சேலம் துணை கமிஷனர் பிருந்தா ஆகியோர் சிறப்பு விசாரணை குழுவில் நியமிக்கப்பட்டனர். இந்த விசாரணை குழு தனது விசாரணையை கடந்த வாரமே தொடங்கியது. முதற்கட்டமாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விவரங்கள், குற்றவாளியின் வாக்குமூலம், புகார் அளித்த மாணவியின் வாக்குமூலம் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக, கைது செய்யப்பட்ட ஞானசேகரன் சம்பவத்தன்று மாணவியை தனது செல்போனில் எடுத்த வீடியோவை யாருக்காவது அனுப்பினாரா என்றும், ஆய்வு செய்ய ஞானசேகரனின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஞானசேகரனை கைது செய்த போது, அவரது செல்போனில் உள்ள வீடியோக்களை அழித்து விட்டார். இதனால் அவரது செல்போனை போலீசார் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அதன் மூலம் தனி போல்டரில் மறைத்து வைத்திருந்த வீடியோ ஆதாரத்தின் படி தான் ஞானசேகரன்தான் குற்றவாளி என்ற உறுதி செய்து போலீசார் கைது செய்தனர்.

எனவே, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் மீண்டும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ஞானசேகரன் பயன்படுத்திய செல்போன் மற்றும் அவர் பயன்படுத்திய 2 சிம்கார்டுகளை வைத்து, கடந்த 6 மாதங்களாக அவர் பயன்படுத்திய வாட்ஸ் அப் தகவல்கள், வீடியோக்கள், யார் யாரிடம் பேசினார், அதன் முழு விபரங்களை சேகரித்து ஆய்வு செய்து வருவதாக, தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் சிறப்பு புலனாய்வு குழுவினர் அண்ணாபல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று செக்யூரிட்டிகளிடம் விசாரணை நடத்தி சில தகவல்களை பதிவு ெசய்தனர்.

The post சிறையில் உள்ள ஞானசேகரனின் செல்போன் வாட்ஸ்அப் விவரங்கள் சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு: ஆபாச வீடியோவை யாருக்காவது பகிர்ந்தாரா; பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று விசாரணை appeared first on Dinakaran.

Tags : Gnanasekaran ,WhatsApp ,Chennai ,Anna University ,Ghanasekaran ,Anna University Campus ,Jnanasekaran ,Special Intelligence ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி...