×

அரியானா தேர்தல் முறைகேடு விவகாரம் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு: காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: அரியானா தேர்தல் முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. அரியானாவில், 90 சட்ட பேரவை தொகுதிகளுக்கான தேர்தல், கடந்த அக். 5ல் நடந்தது. 48 தொகுதிகளில் வென்று, பா.ஜ ஆட்சியை தக்க வைத்தது. இந்த தேர்தலில் எண்ணற்ற முறைகேடுகளை பா.ஜ அரங்கேற்றி உள்ளதாக குற்றம் சாட்டி தேர்தல் கமிஷனிடம், காங்கிரஸ் புகார் கூறியிருந்தது. இந்த புகார்களை தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளவில்லை.

இதுகுறித்து தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறைகளையும் காங்கிரஸ் குறை சொல்வதை ஏற்க முடியாது. இவ்வாறு புகார் கூறுவது, காங்கிரசுக்கு வழக்கமான ஒன்றே’ என்றார். இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உள்பட, 9 மூத்த காங்., தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி உள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அரியானா தேர்தல் தொடர்பாக நாங்கள் கூறியுள்ள புகார்களுக்கு தேர்தல் கமிஷன் அளித்துள்ள பதிலை கவனமாக ஆராய்ந்தோம். எந்தவித முறைகேடுகளும் நடக்கவில்லை எனக் கூறி, தேர்தல் கமிஷன் தனக்கே நற்சான்றிதழ் அளித்துள்ளதில் ஆச்சரியம் இல்லை. அதேசமயம், காங்கிரசுக்கு எதிராக தேர்தல் கமிஷன் பயன்படுத்தியுள்ள வார்த்தைகள், முன்வைத்த குற்றச்சாட்டுகள், இந்த கடிதத்தை எழுத வைத்துள்ளன.

தேர்தல் கமிஷனுக்கு ஆலோசனை அளிப்பது அல்லது வழிநடத்துவது யார் எனத் தெரியவில்லை. ஆனால், அரசியலமைப்பு சட்டப்படி உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு என்பதை தேர்தல் கமிஷன் மறந்து விட்டது. நடுநிலைக்கான கடைசி நம்பிக்கையை சிதறடிப்பதே தேர்தல் கமிஷனின் லட்சியமாக தெரிகிறது; அந்த லட்சியத்தை அடைய ‘மகத்தான பணிகளை’ அது செய்து வருகிறது. எங்கள் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றங்கள் மூலம் சட்ட நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அரியானா தேர்தல் முறைகேடு விவகாரம் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு: காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ariana ,Election Commission ,Congress ,New Delhi ,Haryana ,BJP ,Dinakaran ,
× RELATED மின்னணு ஆவண விதியில் திருத்தம்...