×

நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம் தீபாவளி விற்பனை ரூ.4 லட்சம் கோடி: துணி, பட்டாசு, எலக்ட்ரானிக் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அமோகம், வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பட்டாசு, துணி, இனிப்பு, எலக்ட்ரானிக் உள்ளிட்ட பொருட்கள் வியாபாரம் எதிர்பார்த்ததைவிட அதிகளவில் இருந்ததால் வியாபாரிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தனர். இந்த தீபாவளிக்கு நாடு முழுவதும் சுமார் ரூ.4 லட்சம் கோடிக்கு விற்பனை ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் (வியாழன்) மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலையில் எழுந்து, குளித்து புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபட்டனர்.

பின்னர் உறவினர்கள், நண்பர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். இதை தொடர்ந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அதிகாலை முதல் இரவு வரை போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொருவரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். குறிப்பாக, இந்த தீபாவளி பண்டிகைக்கு பகலில் வெடிக்கும் வெடியை விட இரவு நேரத்தில் வெடிக்கும் ராக்கெட், புஸ்வானம் மற்றும் வானில் வர்ணஜாலம் காட்டும் வெடிகள் அதிகளவில் வெடிக்கப்பட்டது.

சென்னையில் இதுபோன்ற பட்டாசுகள் வெடிக்கும்போது, இரவை பகலாக்கும் அளவுக்கு வானத்தில் பட்டாசு வர்ணஜாலம் காட்டியது என்று சொன்னால் அது மிகையாகாது. சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மழை இல்லாமல் இருந்தது பட்டாசு பிரியர்களை மட்டுமல்லாது, வியாபாரிகளையும் இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி, ஆங்காங்கே பட்டாசு விற்பனைக்காக தனி கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இவர்கள் சிவகாசியில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி வந்து இங்கு விற்பனை செய்தனர். அதேநேரம், சிவகாசியில் இருந்தும் வியாபாரிகள் பலரும் நேரடியாக சென்னை, கோவை உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு வந்து தள்ளுபடி விற்பனையில் பட்டாசுகளை விற்பனை செய்து அசத்தினர். நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை வானம் தெளிவாக இருந்ததால் பொதுமக்களும் ஆர்வமுடன் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

சென்னையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி வரைகூட பட்டாசு கடைகளில் பட்டாசுகளை வாங்க அதிகளவில் மக்கள் திரண்டு இருந்ததை பார்க்க முடிந்தது. அதனால், இந்த தீபாவளிக்கு பட்டாசு வியாபாரிகள் அதிகளவில் விற்பனை செய்து, அதிக லாபம் பார்த்தனர். இரவு 11 மணி வரை சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் பட்டாசு மற்றும் மத்தாப்பு வெடி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. இதுகுறித்து சிவகாசி பட்டாசு வியாபாரிகள் சிலர் கூறும்போது, \\”நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டிருந்தது. இதனால் சிவகாசி பட்டாசு தொழிலாளிகள் பெரியஅளவில் பாதிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் இந்த ஆண்டு, தமிழகத்தில் மழை இல்லாததால் கடந்த 10 நாட்களுக்கு முன்னதாகவே சென்னையில் தீவுத்திடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பட்டாசுகள் விற்கப்பட்டது. பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். சென்னை மட்டுமல்லாமல், தமிழகத்தின் முக்கிய நகர பகுதியான மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம், புதுக்கோட்டை, ஈரோடு, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேரடியாக சிவகாசியில் இருந்து பட்டாசு விற்பனை செய்ய ஏற்பாடு செய்திருந்தோம்.

இதுதவிர தமிழகம் மட்டும் இல்லாமல் வெளிமாநிலங்களுக்கும் சிவகாசியில் இருந்து பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகர பகுதிகளில் மழை இல்லாமல் வானம் தெளிவாக இருந்ததால் பட்டாசு பிரியர்கள் மிகவும் ஆர்வமுடன் பட்டாசு வெடிக்க முடிந்தது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பட்டாசு வியாபாரிகள் அதிக லாபம் பெற்று இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் (தமிழகம் உள்பட) சிவகாசியில் இருந்து ரூ.6 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனையாகி இருந்தது.

இதில் வியாபாரிகள் கூடுதல் லாபம் வைத்து விற்பனை செய்திருப்பார்கள். ஆனாலும் இதுகுறித்து முழுமையான தகவல் ஒரு சில நாட்களில்தான் தெரியவரும்” என்றனர். தமிழகத்தில் பட்டாசு விற்பனையை போன்று ஜவுளிக்கடைகளிலும் விற்பனை அமோகமாக இருந்தது. தீபாவளி என்றாலே, புதுதுணி வாங்கி உடுத்துவது, பட்டாசு வெடிப்பதுதான் என்ற பழக்கம் காலங்காலமாக இருந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஜவுளிக்கடைகளில் கடந்த சில நாட்களாக கூட்டம் அலைமோதியது.

சென்னையில் பெரிய பெரிய ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, கடைசி நேர ஷாப்பிங் களைகட்டியது. கடந்த சில ஆண்டுகளைவிட இந்த ஆண்டு புதிய ஆடைகளின் விலை அதிகளவில் இருந்தாலும், பொதுமக்கள் புதிய ஆடை வாங்க அதிக ஆர்வம் காட்டினர். தமிழகத்தில் மட்டும் ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் ஜவுளி விற்பனை நடந்திருக்கலாம் என்று வணிகர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஜவுளி விற்பனையாளர்கள் கூறும்போது, “கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளி விற்பனை அமோகமாக இருந்தது. குடும்பம், குடும்பமாக ஜவுளி கடைகளுக்கு வந்து புதிய ஆடைகளை வாங்கி சென்றனர். குறிப்பாக, கடைசி நேர விற்பனை சூடுபிடித்தது. இதனால் ஜவுளி வியாபாரிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்” என்றனர். இதேபோன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி இந்தியாவில் மட்டும் ரூ.20 ஆயிரம் கோடிக்கு தங்கம், வெள்ளி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நகை வணிகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுபற்றி அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் கூறும்போது, ‘‘எப்போதுமே பண்டிகை உள்ளிட்ட நல்ல நாட்களில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகளை வாங்குவது பலரது விருப்பமாக இருக்கிறது. அதிலும் தீபாவளி பண்டிகைக்கு புது மாப்பிள்ளைக்கு மோதிரம் போடுவது வழக்கம். அந்த வகையில் தீபாவளிக்கு மோதிர விற்பனை ஜோராக இருந்தது. பிரேஸ்லெட் உள்ளிட்ட நகைகளின் விற்பனையும் சூடு பிடித்தது. அதேபோல் ஒரு சிலர் தீபாவளிக்கு பரிசாக பெண்களுக்கும் தங்க நகை வாங்கிக் கொடுத்தனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி தங்கம், வெள்ளி விற்பனை அதிகரித்துள்ளது. அதாவது இந்தியா முழுவதும் ரூ.20 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது. ரூ.2,500 கோடிக்கு வெள்ளி விற்பனையானது. 25 டன் தங்கமும், 250 டன் வெள்ளியும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 15 சதவீதம் குறைவாகும். காரணம், தங்கம் விலை அதிகமானதால் விற்பனையிலும் சரிவு ஏற்பட்டது’’ என்றார்.

அதேபோல் கார் உள்ளிட்ட வாகன விற்பனையும் இந்த ஆண்டு இரு மடங்கு அதிகரித்துள்ளது. தீபாவளியையொட்டி இரண்டு மடங்கு கார் விற்பனை நடந்துள்ளது. தீபாவளியையொட்டி எலக்ட்ரானிக் பொருட்கள், இனிப்பு, நகை, துணி வர்த்தகம் என நாடு முழுவதும் சுமார் ரூ.4.25 லட்சம் கோடி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், இதில் குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் கோடிக்கு தீபாவளி பண்டிகையையொட்டி நாடு முழுவதும் வர்த்தகம் நடைபெற்றிருக்கும் என்று அகில இந்திய வர்த்தக சுங்க களின் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

* பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தால் விற்பனை அதிகம்
இந்த தீபாவளிக்கு ஜவுளி அதிகமாக விற்பனை செய்ததற்கு, தமிழக அரசு பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருவதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இந்த பணத்தை சேமித்து வைத்து, பெண்கள் அதிகமாக கடைகளுக்கு சென்று ஜவுளி, பட்டாசு, இனிப்புகள் என்று தீபாவளிக்கு அதிக அளவில் பொருட்களை வாங்கிச் சென்றனர். ஆண்களை எதிர்பார்க்காமல் தங்களுடைய கையில் பணம் இருந்ததால், தீபாவளியை அவர்கள் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். மக்களிடம் அதிக அளவில் பணம் புழங்கியதால் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

* ஆடு, கோழி விற்பனை ஜோர்
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழத்தில் ஜவுளி, பட்டாசு விற்பனையை போன்று ஆடு மற்றும் கோழி விற்பனையும் அமோகமாக இருந்தது. முன்னதாக கடந்தவாரம் சந்தைகளில் பல்லாயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இந்த ஆடுகளை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கொடுத்து வியாபாரிகள் வாங்கி சென்றனர். இதன்மூலம் தமிழக ஆடு சந்தைகளில் ரூ.5 ஆயிரம் கோடிக்கும் மேல் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதே அளவுக்கு கோழிகளும் விற்பனையானது. தீபாவளியையொட்டி கறிக்கடைகளில் ஒரு கிலோ இறைச்சி ரூ.1000 முதல் ரூ.1,100 வரை விற்பனை செய்யப்பட்டது. தீபாவளிக்கு முன் ஒரு கிலோ இறைச்சி ரூ.900 முதல் ரூ.940 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று கோழி இறைச்சியும் ரூ.200 முதல் ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகம் இருந்தாலும் பொதுமக்கள் கறிக்கடைகளில் வரிசையில் நின்று ஆடு, இறைச்சி கறியை வாங்கி சென்றனர்.

The post நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம் தீபாவளி விற்பனை ரூ.4 லட்சம் கோடி: துணி, பட்டாசு, எலக்ட்ரானிக் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அமோகம், வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Nationwide Kolagala Celebration Diwali ,Chennai ,Diwali ,
× RELATED மீனாட்சி படம் திருட்டு கதையா?