×
Saravana Stores

சேலம் சிறையை தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் கைதிகள் மன அழுத்தம் குறைக்க பண்பலை

வேலூர்: தமிழ்நாட்டில் வேலூர், சென்னை, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட 9 மத்திய சிறைச்சாலைகள், பெண்கள் தனிச்சிறை, மாவட்ட சிறைகள், துணை சிறைகள் உள்ளன. இவற்றில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைப்பதற்கான கட்டமைப்புகள் உள்ளன. சிறைச்சாலைகள் என்பது தண்டனைக்குரிய இடங்களாக இல்லாமல் சீர்த்திருத்த பள்ளிகளாக மாற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டின் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை சீர்திருத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கைதிகள் விடுதலையான பிறகு அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படாமல் சக மனிதர்களை போல வாழ்வதற்காக அவர்களுக்கு பல்வேறு தொழில்கள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. சிறைகளில் உள்ள நன்னடத்தை கைதிகளுக்கு ஷூ தயாரிப்பு, புக் பைண்டிங், மெழுகு, அலுமினியம் இன்டஸ்ட்ரி, பேக்கரி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் கற்று தரப்படுகிறது.மேலும் கைதிகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், சிறைகளில் வாலிபால், கேரம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.

இந்நிலையில், சேலம் மத்திய சிறையில் கைதிகளின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், ‘சிறை பண்பலை’ தொடங்கப்பட்டுள்ளது. இந்த எப்எம்மில், சிறைவாசிகளுக்கு தன்னம்பிக்கை சார்ந்த கதைகள் மற்றும் கட்டுரைகள், மன நல ஆலோசனைகள் மற்றும் மனம் நலம் சார்ந்த கருத்துக்கள், திரையிசை பாடல்கள், இன்றைய தகவல் மற்றும் பொது அறிவு, சுற்றுப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் சிறைத்துறை மூலம் கைதிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது.

சேலம் சிறையை தொடர்ந்து, வேலூர் மத்திய சிறையிலும் கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்க சிறை பண்பலை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை சிறைத்துறை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கைதிகள் மறுவாழ்வுக்கு மாவட்ட நிர்வாகம், முன்னாள் சிறைவாசி நலச்சங்கம், தொண்டு நிறுவனங்கள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. சிறைவாசிகள் வேலை செய்யும் போது, அவர்கள் நல்ல கருத்துகளை தெரிவிக்கும் வகையில் எப்எம் உருவாக்கப்படுகிறது.

சேலம் சிறையில் பண்பலை நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து வேலூர் மத்திய சிறையிலும் கைதிகளுக்கு எப்எம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கப்பட்டு, அனுமதி கேட்டு சிறை நிர்வாகத்திடம் கடிதம் வழங்கப்பட உள்ளது. எப்எம் தொடங்குவதற்கு அனுமதி கிடைத்ததும் ஓரிரு மாதங்களில் வேலூர் சிறையிலும் கைதிகள் எப்எம் மூலம் நல்ல கருத்துகளை கேட்க முடியும். இதனால், கைதிகளின் மனதில் எதிர்மறை எண்ணங்கள் வராமல் தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post சேலம் சிறையை தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் கைதிகள் மன அழுத்தம் குறைக்க பண்பலை appeared first on Dinakaran.

Tags : Salem ,Jail ,Vellore Central Jail ,Vellore ,Tamil Nadu ,Chennai ,Trichy ,Madurai ,
× RELATED வேலூர் மத்திய சிறையில் கைதி...