×

‘சூப்பர் பவர்’ இருப்பதாக கூறி 4வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவர்: கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை

மதுக்கரை: கோவையில் சூப்பர் பவர் இருப்பதாக கூறி கல்லூரி விடுதியின் 4வது மாடியில் இருந்து குதித்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த அரசு மகன் பிரபு (19). இவர், கோவை அடுத்த மயிலேரிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு செயற்கை நுண்ணறிவுத்துறையில் படித்து வருகிறார்.

அரசு பள்ளியில் சிறப்பாக படித்த மாணவர் பிரபு, இட ஒதுக்கீடு அடிப்படையில் இந்த பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக தனக்கு ‘சூப்பர் பவர்’ இருப்பதாகவும், தனது சக்தியை கொண்டு அசாத்திய விஷயங்களை செய்ய முடியும் என்று தனது கல்லூரி நண்பர்களிடமும், விடுதி அறையில் தங்கியிருக்கும் நண்பர்களிடமும் பிரபு கூறி வந்துள்ளார். மேலும், தனது செல்போனில் சாகச வீடியோக்கள், சூப்பர் ஹீரோ வீடியோக்களை அடிக்கடி பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் கடந்த சில தினங்களாக தனக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டதாகவும், அதனால் உடல் நலம் சரியில்லை எனவும் நண்பர்களிடம் கூறி வந்துள்ளார். இருப்பினும், தனது சக்தி குறையவில்லை. சூப்பர் ஹீரோக்களுக்கு உள்ள பவர் என்னிடம் உள்ளது என கூறி வந்த அவர், நேற்று மாலை விடுதியில் தங்கியிருந்தபோது திடீரென 4வது மாடிக்கு சென்று அங்கிருந்து என் சூப்பர் பவரை காட்டுகிறேன் பாருங்கள் என்று கூறியபடி கீழே குதித்துள்ளார்.

இதில் பிரபுவின், முன் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை, அங்கிருந்த மாணவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

The post ‘சூப்பர் பவர்’ இருப்பதாக கூறி 4வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவர்: கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Madhukarai ,Coimbatore ,Son Prabhu ,Perundurai, Erode District ,Mayileripalayam ,Dinakaran ,
× RELATED தாயை இழந்து தவிப்பு; முதுமலை முகாமில் குட்டி யானை பராமரிப்பு