×
Saravana Stores

இமானுவேல் சேகரன் மணிமண்படம் கட்ட தடை கேட்டு ஐகோர்ட் கிளையில் வழக்கு:நவ.19ல் இறுதி விசாரணை


மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த ஆப்பநாடு மறவர் சங்க செயலர் குணசேகரன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ரூ. 3 கோடி மதிப்பில் இமானுவேல் சேகரனுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என கடந்தாண்டு செப்டம்பரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு மண்டபம் கட்ட தேர்வு செய்திருக்கும் இடம் பொதுமக்கள் வாரச்சந்தை நடத்தும் இடம். இந்த இடத்தை நினைவு மண்டபத்துக்காக கையகப்படுத்தினால் வியாபாரிகள் பாதிக்கப்படுவர்.

எனவே, இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை கையகப்படுத்த இடைக்கால தடை விதித்தும், இமானுவேல் சேகரனின் மணி மண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை தலைமை நீதிபதி ராம், நீதிபதி முகமது சபீக் அமர்வு விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் வாதிடுகையில், ‘இமானுவேல் மணிமண்டபம் கட்டும் பணி 73 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இது அரசின் கொள்கை முடிவு. இதற்கு எதிராக மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு உரிமையில்லை. அரசாணை பிறப்பித்து பல மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கு தொடரப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது’ என்றார்.

மனுதாரர் தரப்பில், சந்தைக்குரிய இடத்தில் மணிமண்டபம் கட்டினால் வியாபாரிகள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். மக்கள் வரிப்பணம் வீணாகும். எனவே தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் மணிமண்டபம் கட்டக்கூடாது. மணிமண்டபம் கட்டுமானப் பணிக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.தேவேந்திரர் சட்ட பாதுகாப்பு மைய மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், விடுதலைக் களம் தலைவர் ராஜ்குமார் தரப்பில் வழக்கறிஞர்கள் எஸ்.பாஸகர்மதுரம், பூபதி ஆகியோர் வாதிடுகையில், ‘இமானுவேல் சேகரன் சுதந்திர போராட்ட தியாகி. அதற்கான ஆதாரங்கள் உள்ளன.

அரசு முழுமையாக ஆய்வு செய்த பிறகே மணிமண்டபம் கட்டுவதற்கான அரசாணையை பிறப்பித்துள்ளது. இதை மனுதாரர் கேள்வி கேட்க முடியாது. இந்த வழக்கில் இடையீட்டு மனுத் தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும்’ என்றனர். இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு, இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். நவ. 19ல் இறுதி விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டது.

The post இமானுவேல் சேகரன் மணிமண்படம் கட்ட தடை கேட்டு ஐகோர்ட் கிளையில் வழக்கு:நவ.19ல் இறுதி விசாரணை appeared first on Dinakaran.

Tags : Emanuel Sekaran ,ICourt ,Manimanpatam ,Madurai ,Appanadu Maravar Sangha ,Gunasekaran ,Ramanathapuram District Kamudi ,Madurai High Court ,Paramakkudi ,Ramanathapuram District ,Emanuel Shekaran ,Dinakaran ,
× RELATED இமானுவேல் சேகரன் மணிமண்டபத்திற்கு தடை கோரிய வழக்கிற்கு எதிராக மனு