×

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு: பயணிகளுக்காக உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்த சிறப்பு பேருந்துகளின் முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் நிருபர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: இன்று மற்றும் நாளை வரை சுமார் 5 லட்சம் பயணிகள் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து இந்த பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. வழக்கமாக இயக்கப்படுகின்ற அரசு பேருந்துகள் 3408. தீபாவளிக்காக இயக்கப்படுகின்ற சிறப்பு அரசு பேருந்துகள் 4250, ஆம்னி பேருந்துகள் – 2000, இந்த பேருந்துகளை நிறுத்துவதற்கான வசதிகளை கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் ஓய்வுநிலை பேருந்துகள் நிறுத்துமிடம் முதலிடத்தில் மதுரை அரசு போக்குவரத்து கழக பேருந்துகளும், 2ம் இடத்தில் நாகர்கோயில், திருநெல்வேலி மார்க்கமாக செல்கின்ற பேருந்துகளும், 3ம் இடத்தில் கோயம்புத்தூர், மற்றும் விழுப்புரம் மார்க்கமாக செல்கின்ற பேருந்துகளும் நிறுத்தப்படும். 4ம் இடத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்படும்.

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கான பேருந்துகள் நிறுத்தப்படும். அதேபோல் கரசங்கால் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அரசு வாடகை அடிப்படையில் இயக்க இருக்கின்ற தனியார் ஒப்பந்த வாகனங்கள் நிறுத்தப்படும். மறைமலைநகர் நகராட்சி மைதானத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்படும். இது இல்லாமல் சி.எம்.டி.ஏ. சார்பாக இந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் தேவையான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

அந்த பேருந்துகள் நிறுத்துகின்ற அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கரசங்கால், மறைமலைநகர் போன்ற பகுதிகளில் மின்விளக்குகள், குடிநீர், கழிப்பறைகள், மேசை, நாற்காலிகள் போன்ற அடிப்படை வசதிகளும் செய்யப்படுகின்றது. 5 முன்பதிவு மையங்கள் இங்கே செயல்படுகின்றது. பிரத்யேகமாக 7845700557, 7845727920, 7845740924 என்ற மூன்று உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. எல்லாவிதமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், செயலாளர் காகர்லா உஷா, போக்குவரத்து ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், தாம்பரம் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சமய், பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

The post தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு: பயணிகளுக்காக உதவி எண்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Diwali ,Clambakkam Bus Station ,Chennai ,Minister ,Chennai Metropolitan Development Committee ,Shekharbabu ,Transport Minister ,Sivashankar ,Kalyankar ,Centenary Bus Terminal ,Klambakkam ,Chengalpattu District ,
× RELATED மீனாட்சி படம் திருட்டு கதையா?